பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டித்தரப்படும் பாரம்பரிய இசைக்கு நடனமாடி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மேட்டுப்பாளையம், ஏப்.13: மேட்டுப்பாளையம் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் எஸ்.எம்.டி.கவிதா கல்யாண சுந்தரம் நேற்று முன்தினம் காரமடை அடுத்துள்ள தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கோபனாரி, மூணுகுட்டை, பட்டிசாலை, கலைஞர் கருணாநிதி நகர், அரக்கடவு, சீங்குழி, காலனி புதூர், செங்குட்டை, மேல்பாவி, காளியூர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்களில் வீடு,வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார்.அவர்களிடம் கலந்துரையாடிய வேட்பாளர் எஸ்.எம்.டி.கவிதா கல்யாண சுந்தரம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கியுள்ளார். குறிப்பாக மகளிருக்கு உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்து திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் தொடர மீண்டும் தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் வர வேண்டும். அவர் பொறுப்பேற்றால் தமிழகத்தில் 10 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதன்படி இப்பகுதி பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். முன்னதாக கோபனாரி பழங்குடியின கிராமத்திற்கு வந்த அவருக்கு ஆரத்தி எடுத்தும், திலகமிட்டும் அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும், பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசைக்கு வேட்பாளர் எஸ்.எம்.டி.கவிதா கல்யாணசுந்தரம் உற்சாகமாக நடனமாடி வாக்குகளை சேகரித்தார்.
இந்நிகழ்வின் போது முன்னாள் எம்எல்ஏ-க்கள் சி.ஆர்.ராமச்சந்திரன், பா.அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி.கல்யாண சுந்தரம், காங்கிரஸ் கோவை வடக்கு மாவட்ட தலைவர் அறிவு என்கிற ரங்கராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: