சங்கராபுரம், ஏப். 17: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்கன்னி கிராமத்தில் கூலி தொழிலாளி மணிகண்டன்-ஷர்மிளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் நேற்று முன் தினம் இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது இவர்களின் வீட்டின் மீது நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக சங்கராபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதில் முன் விரோதத்தின் காரணமாக சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் இந்த சம்பவம் நடைபெற்றதா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து சென்று தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. கூலி தொழிலாளியின் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
