சுயநலத்திற்காக தமிழ்நாட்டை அடகுவைக்க ஒன்று சேர்ந்திருக்கும் துரோக கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும்: பரமக்குடி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

ராமநாதபுரம்: கொள்கையற்ற அடிமைக் கூட்டத்தை, சுயநலத்திற்காக தமிழ்நாட்டை அடகு வைக்க ஒன்று சேர்ந்திருக்கும் துரோக கூட்டத்தை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என்று பரமக்குடியில் நடந்த பிரசாரப் ெபாதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் ராஜகண்ணப்பன் (முதுகுளத்தூர்), காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), கதிரவன் (பரமக்குடி), காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம் (திருவாடானை) ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாம் ஆட்சி பொறுப்புக்கு வந்த போது தமிழ்நாடு என்ன நிலையில் இருந்தது? கொரோனாவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கூட கிடைக்காத நிலையில் இருந்தது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் 0.07 விழுக்காடு என்று சரிந்து கிடந்தது. நிதி

நிலைமை படுபாதாளத்தில் இருந்தது. போர்க்கால அடிப்படையாக முதலில் கொரோனாவில் இருந்து மக்களை மீட்டெடுத்தோம். அடுத்து, திறமையான நிர்வாகத்தால் நிதி நிலைமையை மீட்டெடுத்திருக்கிறோம். அதன் பயனாக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 11.19 விழுக்காடு என்ற டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வந்திருக்கிறோம். இதெல்லாம் சாதாரணமாக நடக்கவில்லை. கடுமையாக உழைத்திருக்கிறோம். ஆனால் இந்த வளர்ச்சி போதுமா? தமிழ்நாட்டை உலகளவில் தனி பிராண்டாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு ஏப். 23ம் தேதி நீங்கள் அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலேயும் என்னென்ன சாதனைகள் செய்கிறோம் என்று உங்கள் முன்பு இருக்கும் இந்த ஸ்டாலின் புள்ளிவிபரங்களுடன் சொல்கிறேன்.

இப்படி என்றைக்காவது ஒருநாள் பழனிசாமி பேசியிருக்கிறாரா? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது, அடுத்தவர்களின் மரணத்தை எதிர்பார்த்து பேசுவது, பெண்களை கண்ணியமில்லாமல் பேசுவது என்று தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார். வாய் கொழுப்பு எடுத்து சாக்கடைக்கு சரிசமமாக வந்து விழும் அவருடைய வார்த்தைகளுக்கு பாடம் புகட்ட போகும் நாள்தான் ஏப்ரல் 23.

கொள்கையற்ற அடிமை கூட்டத்தை, சுயநலத்திற்காக தமிழ்நாட்டை அடகு வைக்க ஒன்று சேர்ந்திருக்கும் துரோக கூட்டத்தை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். சாதனைகளால் தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கும் திராவிட மாடல் அரசை மீண்டும் ஆட்சியில் நீங்கள் அமர்த்த வேண்டும். ஏனெனில், திராவிட மாடலின் திட்டங்கள் என்பது வரலாற்றில் நிற்கும் திட்டங்கள் மட்டுமல்ல, புது வரலாற்றையே படைக்கும் திட்டங்கள். வெறும் புள்ளிவிவரங்களில் அல்ல, கோடிக்கணக்கான தமிழ் மக்களின் புன்னகையால் எழுதப்பட்டிருக்கும் சாதனை சரித்திரம்தான் திராவிட மாடல்.

இந்த ஸ்டாலின் சொன்னால், சொன்னதை செய்வான். நான் கலைஞரின் மகன். சொன்னதை உறுதியாக செய்வேன். சொல்லாமல் அதிரடியாகவும் செய்வேன். அதனால்தான், வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று இருந்த நிலையை மாற்றி, தெற்குதான் வழிகாட்டுகிறது என்ற நிலையை திராவிட மாடலில் உருவாக்கி இருக்கிறோம். அப்படி வழிகாட்டும் தெற்கை, வஞ்சிக்கும் செயலில்தான் ஒன்றிய பாஜ அரசு இறங்கியிருக்கிறது. மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுக்கிறோம் என்பதை காரணமாக காட்டி, ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பார்க்கிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்ற தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை தண்டிக்க பார்க்கிறார்கள். இதை, இந்தியாவில் இருக்கும் அத்தனை ஜனநாயக இயக்கங்களும் எதிர்க்க போகிறோம்.

இந்த அநியாயத்தை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் பழனிசாமிக்கு இருக்கிறதா, மற்றவற்றுக்கெல்லாம் வாய்கிழிய பேசும் பழனிசாமி, பாஜவின் அட்டூழியங்களை எதிர்த்து கேள்வி கேட்க சொன்னால் மட்டும், சைலண்ட் மோடுக்கு போய் விடுகிறார். மோடியையும் அமித்ஷாவையும் எதிர்த்து பேச வேண்டுமென்றால் பயத்திலேயே ஸ்விட்ச் ஆப் ஆகிவிடுவார். அவர் எதற்காக பிரசாரத்திற்கு போகிறார் தெரியுமா. இப்படிப்பட்ட ஒரு அடிமை, உலகத்தில் யாருமே பார்த்ததில்லை என்ற கின்னஸ் சாதனையை படைக்கத்தான் பிரசாரம் செய்கிறார். அவரது ஓனர் பாஜதான்.

சென்னையில் ஓய்வுபெற்ற நீதியரசர் அரி பரந்தாமனின் ஜீரோ பிஜேபி என்ற இயக்கத்தை துவக்கி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பரகால பிரபாகர் நாம் என்ன மொழி பேச வேண்டும், நாம் என்ன படிக்க வேண்டும், நாம் என்ன உடுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் பாஜவை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். பாஜ எவ்வளவு பெரிய டேமேஜை – டேஞ்சரை உண்டாக்கியிருந்தால், அவர் இப்படி பேசியிருப்பார் என்று நினைத்து பாருங்கள்.

மேற்கு வங்கத்தில் பாஜ தேர்தல் அறிக்கை வெளியிட்ட பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என்ற சவாலை, அவர்களால் தமிழ்நாட்டில் விட முடியவில்லை ஏன் என்றால், தமிழ்நாட்டை பாதுகாத்து கொண்டு இருப்பது திராவிடப் பெருஞ்சுவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் கட்டி காத்த இந்த தமிழ் கோட்டையை சமத்துவத்துக்கு எதிரான மதவாத கும்பல்கள் ஆக்கிரமிக்க ஒருநாளும் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள் இதை பாஜவும் நன்றாக உணர்ந்திருக்கிறது.

அதனால்தான் நம்முடைய கையையே எடுத்து, நம்முடைய கண்ணை குத்தும் வேலையைச் செய்ய இன்றைக்கு அவர்கள் அதிமுகவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். பாஜவை தமிழ்நாட்டிற்குள் அழைத்து கொண்டு வருவதற்கான பல்லக்குத் தூக்கியாக மாறியிருப்பவர்தான் பழனிசாமி. காலில் விழுந்து விழுந்து கால்களை வாரிவிட்ட நீங்கள், இப்போது சொந்த மக்களுக்கே குழி பறித்து துரோகம் செய்கிறீர்கள். இதுதான் பழனிசாமி செய்யும் பச்சை துரோகம்.
பழனிசாமி தமிழ்நாட்டை ஆட்சி செய்த 4 ஆண்டுகள் என்பது, ஊழல்களும் – மக்கள் விரோத நடவடிக்கைகளும் நிறைந்த, இருண்ட ஆட்சி காலம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றிக்காக. அடுத்து அமையவுள்ள நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிப்போம். இது உங்கள் ஸ்டாலினின் கேரண்டி. இவ்வாறு பேசினார்.

* மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது, அடுத்தவர்களின் மரணத்தை எதிர்பார்த்து பேசுவது, பெண்களை கண்ணியமில்லாமல் பேசுவது என்று எடப்பாடி தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார். வாய் கொழுப்பு எடுத்து சாக்கடைக்கு சரிசமமாக வந்து விழும் அவருடைய வார்த்தைகளுக்கு பாடம் புகட்ட போகும் நாள்தான் ஏப்ரல் 23.
* பாஜவின் அட்டூழியங்களை எதிர்த்து கேள்வி கேட்க சொன்னால் மட்டும், சைலண்ட் மோடுக்கு போய் விடுகிறார். மோடியையும் அமித்ஷாவையும் எதிர்த்து பேச வேண்டுமென்றால் பயத்திலேயே ஸ்விட்ச் ஆப் ஆகிவிடுவார்.

ஐபிஎல்லில் தமிழ்நாடுகிட்ட டெல்லி தோற்ற மாதிரி தேர்தலிலும் டெல்லி விழூம்;
பரமக்குடியில் கூட்டத்தினரை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘நேற்று, ஐபிஎல் மேட்ச் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நானும் புதுக்கோட்டையில் இருந்து வேனில் வரும்போது ஐபேடில் மேட்ச் பார்த்தேன். அதில், டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் மேட்சில் டெல்லி தோற்று போனது போல், இந்த தேர்தலில் தமிழகத்தில் டெல்லி தோத்துப் போகும். இந்த தேர்தலில் தமிழ்நாடு அணி தான் வெற்றி பெறப்போகிறது’’ என்றார்.

உலக நாடுகளிடம் விஸ்வகுரு இலங்கையிடம் மவுனகுரு:
‘இங்கு மீனவ சொந்தங்கள் வந்திருப்பீர்கள். உக்ரைன் போரை நிறுத்திவிட்டேன், அமெரிக்காவையே அலற விட்டேன் என்று சொல்லி கொண்டிருக்கும் விஸ்வகுரு மோடி, அண்டை நாடான இலங்கையிடம் பேச சொன்னால் மவுனகுருவாக ஆகிடுவிடுவார். தமிழ்நாட்டு மீனவர்கள்தானே என்பதால், தட்டி கேட்காமல் இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். நம்முடைய தமிழ்நாட்டு மீனவர்களை, இந்திய மீனவர்களாக நினைத்திருந்தால் இப்படி அல்லல்பட விட்டிருப்பாரா. கச்சத்தீவு மற்றும் மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்ற தீர்மானம் உள்பட எத்தனை கோரிக்கைகளை அனுப்பி வைத்திருப்போம். இதுவரை ஒன்றிய பாஜக அரசு எடுத்த நடவடிக்கை என்ன, எதுவும் இல்லை. பாஜவுக்கு தமிழ்நாட்டின் மீது வரும் திடீர் அக்கறை என்பது, வெறும் அரசியல் ஸ்டண்ட் மட்டும்தான். அவர்கள் செய்வது ராஜதந்திரம் இல்லை, இரட்டை வேட தந்திரம்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories: