*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமான மூணாறில், தற்போது கழிவு மேலாண்மை சிக்கலால் தன் இயற்கை அழகை இழந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்த்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான மூணாறுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக நகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தங்கும் விடுதிகளும், உணவகங்களும் மிக அதிக அளவில் பெருகியுள்ளன. இதனால் உருவாகும் டன் கணக்கிலான கழிவுகளைக் கையாளுவதில் உள்ளூர் ஊராட்சி நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக உள்ளது.
ஊராட்சி சார்பில் குப்பை சேகரிக்கப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், சில வணிக நிறுவனங்களும் பயணிகளும் சாலையோரங்களில் பொறுப்பற்ற முறையில் குப்பைகளை வீசிச் செல்கின்றனர்.
குறிப்பாக, காய்கறி மற்றும் இறைச்சிக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால், நகர் பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், இக்கழிவுகளை உண்ண வரும் தெருநாய்களால் சிறுவிபத்துகளும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
மூணாறின் உயிர்நாடியாகக் கருதப்படும் முதிரப்புழை ஆற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள சில விடுதிகள் மற்றும் உணவகங்களில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி இல்லாததால், கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலந்து வருகின்றன. இதனால் தெளிந்த நீரோடையாக இருந்த முதிரப்புழை ஆறு, தற்போது கழிவுநீர் ஓடையாக உருமாறி வருகிறது.
தற்போது மூணாறில் கோடை மழை பெய்து வரும் நிலையில், ஆற்றோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு, ஆற்றின் குறுக்கே ஆங்கங்கே தேங்கிக் கிடக்கின்றன.
இதனால் நீரோட்டம் தடைபட்டு கழிவுகள் தேங்குவதால் கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும், விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
