கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் புதுச்சேரி ஓட்டல்களில் தொடர்ந்து அதிகரிக்கும் உணவு விலை

*பேச்சுலர்ஸ், சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்பு

புதுச்சேரி : அமெரிக்கா-ஈரான் போரால் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க வணிக சிலிண்டர்களை தாராளமாக வழங்குவதை ஒன்றிய அரசு குறைத்துள்ளது.

சிலிண்டர்களின் விலையும் உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களையும் 25 நாட்களுக்குப் பிறகே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. 25 நாட்களுக்குப் பிறகு புக் செய்தாலும் வீட்டுக்கு சிலிண்டர் வர மேலும் ஒரு வாரம் ஆகி விடுகிறது.

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெரிய ஓட்டல்களில் குறிப்பிட்ட உணவுகள் மட்டுமே கிடைக்கும் எனவும், அதுவும் ஆரம்பத்திலேயே எந்தெந்த உணவு வேண்டும் என முழுமையாக கூறிவிட வேண்டும். உடனடியாக செய்து தர வேண்டிய தோசை, கிரில்டு உணவுகள் இல்லை என கறாராக கூறிவிடுகின்றனர்.

சிறிய ஓட்டல்கள் வைத்திருக்கும் பலர், தங்களது வீடுகளில் விறகு அடுப்பில் உணவு தயாரித்து ஓட்டல்களுக்கு எடுத்து வந்து சப்ளை செய்கின்றனர். இன்னும் சில ஓட்டல்களில், கார் பார்க்கிங் உள்ளிட்ட காலி இடங்களை விறகு அடுப்பாக மாற்றி சமைக்கின்றனர்.

இன்னும் சிலர், காலி மனையை வாடகைக்கு வாங்கி அங்கு உணவுகளை சமைத்து ஓட்டல்களில் விற்கும் நிலையுள்ளது. இதனால் விறகு விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. முன்பு 20 கிலோ விறகு ரூ.60 முதல் ரூ.100 வரை விற்றது, இப்போது ரூ.270 முதல் ரூ.350 வரை அதிகரித்து விட்டது.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியில் பல சிறிய ஓட்டல்கள் ஏற்கனவே மூடப்பட்டு விட்டன. இயங்கும் ஒருசில ஓட்டல்களில் உணவு விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சாதாரண ஓட்டல்களில் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்ட சப்பாத்தி, பரோட்டா இப்போது ரூ.20 முதல் ரூ.35க்கு விற்கப்படுகிறது. வழுதாவூர் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மினி டீ ரூ.20ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு விட்டது.

தொடர்ந்து அதிகரிக்கும் உணவு விலையால் சுற்றுலா பயணிகள், பேச்சுலர்ஸ், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுக்கான மாத செலவு அதிகரித்து விட்டது. ஆனால் வருமானம் அதே அளவு தான் இருப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

அதிகம்பேர் உள்ள குடும்பத்தில் 25 நாட்களுக்கு முன்பே சிலிண்டர் முடிந்து விடுகிறது. 25 நாட்களுக்கு பிறகு தான் புக் செய்து, ஒரு வாரத்திற்குப்பிறகு தான் சிலிண்டர் வருகிறது. இடைப்பட்ட காலத்தில் மின்சார அடுப்பில் (இன்டக்‌ஷன் ஸ்டவ்) சமைக்க வேண்டியுள்ளதால் மின்கட்டண பில்லும் எகிறி விடுகிறது.

ஓட்டல்களில் உணவு தட்டுப்பாடு காரணமாக சாலையோர உணவகங்களை சுற்றுலா பயணிகள் நாடுகின்றனர். சாலையோர டிபன் கடைகளும் உணவு விலையை உயர்த்தி விட்டதால் பாதிப்படைந்துள்ளனர்.

Related Stories: