புதுச்சேரியில் பகலில் கொளுத்தும் வெயில், இரவில் புழுக்கம் மாலை நேரத்தில் கடற்கரையில் குவியும் மக்கள்

புதுச்சேரி : கோடை வெயில் தனது கோர முகத்தை காட்டத்தொடங்கி விட்டது. தற்போது புதுவையில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை 9 மணி முதலே சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தால் வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சுகின்றனர். மதிய நேரத்தில் வீடுகளின் உள்ளேயே அமரமுடியவில்லை.

அந்த அளவிற்கு வெயிலின் வெப்பம் அதிகமாக உள்ளது. மின்விசிறிகளை ஓட விட்டால், அனல் காற்றுதான் வீசுகிறது. சமையல் செய்யும்போது அடுப்பில் இருந்து ஏற்படும் வெப்பத்தால் பெண்கள் அவதிப்படுகின்றனர். இதனால் பெரும்பாலானோர் காலையிலேயே மதியத்துக்கும் சேர்த்து சமையலை முடித்து விடுகின்றனர்.

பகல் நேரத்தில் வெளியில் செல்லும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் மிகுந்த சிரமம் அடைகின்றனர். வெயில் கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நகர பகுதியில் ஆங்காங்கே உள்ள மரங்களின் அடியில் நின்று பொதுமக்கள் ஓய்வு எடுப்பதை காண முடிகிறது.

வெயிலுக்கு இதமாக வெள்ளரிக்காய், தர்பூசணி, பழச்சாறு, ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களையும் குடித்து உடலில் ஏற்படும் வெப்பத்தை தணிக்கின்றனர்.

இதனால் சாலையோரங்களில் கரும்புச்சாறு, பழ ஜூஸ் கடைகள் புற்றீசல் போல் முளைக்க தொடங்கி விட்டன. வீட்டில் குளிர்ந்த தண்ணீரை பருகுவதற்காக மண் பானைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

பகல் நேரத்தில் வெளியே செல்லும் பெண்கள் துப்பட்டாவால் தங்கள் முகத்தை மூடிக்கொண்டும், குடைகளை பிடித்தபடியும் செல்வதை காண முடிகிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் பகல் நேரத்தில் வெயிலில் தலைகாட்ட முடியாது என்பதால் விடுதி அறைகளிலேயே முடங்கிக்கிடக்கின்றனர். இதனால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மாலை 4 மணிக்கு மேல்தான் வெயிலின் தாக்கம் குறையத்தொடங்குகிறது. பகலில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் பொதுமக்கள் மாலை நேரத்தில் கடற்கரை சாலை, பாண்டி மெரினா பீச், பூங்காக்களுக்கு காற்று வாங்க குவிகின்றனர். தலைமை செயலகம் எதிரிலும், பாண்டி மெரினா பீச்சிலும் கடலில் இறங்கிகால்களை நனைக்கின்றனர்.

பாதுகாப்பு காரணமாக அங்கு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அவர்களை வெளியேற்றி வருகின்றனர். கடற்கரையில் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வரும் காலங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.

Related Stories: