உளுந்தூர்பேட்டை, ஏப். 13: சென்னையில் இருந்து தனியார் டிராவல்ஸ் ஆம்னி பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை கோயம்புத்தூர் பீளமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த பேருந்து நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த சேலம் ரோடு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தை ஓட்டிச்சென்ற மணிகண்டன் மற்றும் பேருந்தில் சென்ற கோயம்புத்தூர், திருப்பூர், அவிநாசி பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் காயமடைந்த டிரைவர் மணிகண்டன் (28), மாற்று டிரைவர் செந்தில்வேலன் (28),
பேருந்தில் சென்ற பயணிகள் ரேணுகா (37), ஆறுமுக பாண்டி (54) சென்னிமலை (31), நந்தகோபால் (54), மணிமாறன் (25), ரஹானா (46), முகமது யூசுப் (47), விக்னேஷ் (35), ரேணுகா ஸ்ரீ (31) உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
