ஊட்டி,ஏப்.13: கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் நகரமே சுற்றுலா பயணிகள் வாகனங்களால் தத்தளித்தது. கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மிக அதிகமாக காணப்படுகிறது. இதனால், ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள காட்டேஜ்கள், லாட்ஜ் ஆகியவைகள் நிரம்பி வழிந்தன. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா மற்றும் ஊட்டி மற்றும் பைக்காரா படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மேலும், ஊட்டி நகருக்குள் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவு வந்த நிலையில் லவ்டேல் சந்திப்பு முதல் மஞ்சனக்கொரை மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும், பூங்கா சாலை மற்றும் ஊட்டி நகரில் சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.எனினும், நகரில் வாகன நெரிசல் காணப்பட்டது. வாகன நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தினறினர். நகரில் போதிய பார்க்கிங் இன்றி வாகனங்களை நிறுத்த முடியாமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால் அனைத்து சாலைகளுமே வாகன நெரிசலில் தத்தளித்தது.
