இன்று தேசிய திறனாய்வு தேர்வு 5 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

கோவை, பிப்.21: கோவையில் 51 மையங்களில் இன்று நடக்கும் தேசிய திறனாய்வு தேர்வை 5 ஆயிரத்து 387 பேர் எழுதுகிறார்கள் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் இடை நிற்றலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், 8-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வு, அரசு தேர்வுகள் துறை சார்பில், இன்று நடத்தப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் 51 மையங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 387 பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள்’’ என்றார்கள்.

Related Stories: