×

மே.வங்கத்தில் குண்டர்களும், ஊடுருவல்காரர்களும் ஆட்சி செய்கிறார்கள்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கடும் தாக்கு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் தற்போது குண்டர்களும், ஊடுருவல்காரர்களும் ஆட்சி செய்கிறார்கள்” என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 பேரவை தொகுதிகளுக்கும் வரும் 23, 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநில, தேசிய கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அதன்ஒரு பகுதியாக பாங்குரா மாவட்டம் சத்னாவில் நடந்த பாஜ பேரணியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அமித் ஷா, “மம்தா பானர்ஜி தேர்தல்கள் நடக்கும் நேரத்தில் மக்களின் அனுதாபத்தை பெற, கை, கால், தலைகளில் கட்டு போட்டு கொண்டு வாக்கு கேட்பார். ஆனால் இந்த தேர்தலில் நீங்கள்(மம்தா) கை, கால், தலையில் கட்டு போட்டு கொண்டாலும், மக்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இங்கு குண்டர்களும், ஊடுருவல்காரர்களுமே ஆட்சி செய்கின்றனர். இந்தியா ஒன்றும் இலவச விருந்தினர் மாளிகை அல்ல. இங்கு பாஜ ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஊடுருவல்காரர்கள் தூக்கி எறியப்படுவார்கள். அத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் சின்டிகேட் ராஜ்ஜியம் முடிவுக்கு கொண்டு வரப்படும்” என்றார்.

இதேபோல் ஓண்டா தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “மேற்குவங்கத்தில் அரசியல் தொடர்பான வன்முறைகளில் 300க்கும் மேற்பட்ட பாஜவின்ர் கொல்லப்பட்டனர். பாஜ ஆட்சிக்கு வந்தால் இந்த கொலைகளுக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். மம்தா ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். பாஜ ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அமித் ஷா, “பாங்குரா பகுதி உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.20க்கும் மேல் விலை கிடைக்க வேண்டிய நிலையில், தற்போது வெறும் ரூ. 2 மட்டுமே கிடைக்கிறது. மம்தா பானர்ஜியின் பிடிவாதத்தால் பிற மாநிலங்களுக்கு உருளைக்கிழக்கு கொண்டு செல்வதில் தடை உள்ளது. பாஜ ஆட்சி அமைந்தால் அந்த தடைகள் நீக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Tags : West Bengal ,Union Minister ,Amit Shah ,Kolkata ,
× RELATED புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத்தில்...