புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் நடந்த 2ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் 10 சதவீத வாக்குகள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன. பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, உபி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, குஜராத், மபி மற்றும் கோவா ஆகிய 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27ல் இந்த 12 மாநிலங்களிலும் எஸ்ஐஆர் தொடங்கிய போது 50.99 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்ஐஆருக்குப் பிறகு 45.81 கோடி வாக்காளர்களாக எண்ணிக்கை குறைந்துள்ளது. எஸ்ஐஆர் மூலம் 5.18 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது 10 சதவீதமாகும். மொத்தம் 66,88,636 இறந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆட்சேபனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு 63.16 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக மீமுள்ள 17 மாநிலங்களில் எஸ்ஐஆர் திருத்தப் பணிகள் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
