திமுகவில் தொடர்ந்து 2வது முறை முதலமைச்சராக யாரும் ஆனதில்லை என்பதை உடைத்துக் காட்டுவேன்: தஞ்சாவூரில் முதலமைச்சர் பேச்சு

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கி திருச்சியில் முடித்தார்.

இதைத்தொடர்ந்து 2ம் கட்டமாக ஏப்ரல் 3ம் தேதி நெல்லையிலும், 3ம் கட்டமாக கடந்த 6ம் தேதி புதுச்சேரியிலும் பிரசாரத்தை தொடங்கினார். நேற்று மாலை மறைமலை நகரில் திமுக-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(10ம் தேதி) முதல் 4ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தஞ்சையில் இருந்து தொடங்கினார்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் திருவையாறு வேட்பாளர் துரை சந்திரசேகரன், தஞ்சை சண்.ராமநாதன், ஒரத்தநாடு வைத்திலிங்கம், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார், திருவிடைமருதூர் கோவி.செழியன், கும்பகோணம் அன்பழகன், பாபநாசம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜகான் ஆகிய ஆகிய 8 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

தஞ்சாவூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; யானை கட்டி போரடித்த மண் தஞ்சாவூர். தஞ்சாவூருக்கு வந்தாலே கம்பீரம் வருகிறது. திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. மே 4-ல் திராவிட மாடல் 2.0 வெற்றியை அறுவடை செய்ய தயாரா?. காவிரித் தாயின் மண்ணுக்கு கலைஞரின் மகன் வந்திருக்கிறேன். தஞ்சை தரணிக்கு வந்தாலே இனம் புரியாத கம்பீரம் பிறக்கிறது. ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனுமே எனது கம்பீரத்திற்கு காரணம்.

தூர்வாரும் பணி ஆய்வு, கலைஞர் நூற்றாண்டு விழா, நாடாளுமன்ற பரப்புரை என தொடர்ந்து தஞ்சைக்கு வந்துள்ளேன். டெல்டா மண்டலத்தில் நடந்த வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டுக்கு வந்திருந்தேன். தொடர்ந்து தமிழ்நாட்டில் தெற்கு, மேற்கு என சுற்றி மீண்டும் டெல்டாவுக்கு வந்துள்ளேன். வேளாண்மையில் சிறந்த தஞ்சை மாவட்டம் எல்லா துறைகளிலும் சிறக்க நிறைய திட்டங்களை செய்துள்ளோம்.

டெல்டா பகுதியில் முதல் டைடல் பார்க்காக தஞ்சை டைடல் பார்க் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருவையாறு கூட்டு குடிநீர் திட்டம், பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் என திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். பட்டுக்கோட்டைக்கு புதிய பேருந்து நிலையம், மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி உள்ளோம். கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையப் பகுதிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சையில் சோழர்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் 2 இடங்களில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்பட உள்ளது. வரவேகூடாது என நினைத்து தடுத்த கும்பகோணம் கலைஞர் பல்கலை.யை திராவிட மாடல் 2.0.வில் அமைத்தே தீருவேன். தமிழ்நாடு அரசு வழங்கக் கூடிய ஊக்கத் தொகையால் நெல் உற்பத்தி பெருகி வருகிறதாம். நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அவதூறுகள் பேசுவதற்கு மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி வாய் திறப்பாரா?. பச்சை துண்டை போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி.

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிரதமர் உறுப்படியாக எதுவும் செய்யவில்லை. அதிகாரிகளை எப்படி பந்தாடலாம் என்பதில் தான் ஒன்றிய பாஜக அரசின் முழு கவனமும் உள்ளது.

5 ஆண்டுகளில் ரூ.2,500 கோடிக்கு மேல் நெல்லுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 ஊக்கத்தொகை என 2021ல் சொன்னோம்; செய்து காட்டினோம். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 ரூபாய் ஆதார விலையாக நிர்ணயம் செய்யப்படும். தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்காக தனியாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் குறித்த நேரத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

யோகத்தை நம்புபவன் அல்ல மு.க.ஸ்டாலின், உழைப்பை நம்புபவன். கலைஞரிடம் உழைப்பை கற்றுக் கொண்ட மாணவர் நான்; திமுகவில் தொடர்ந்து 2வது முறை முதலமைச்சராக யாரும் ஆனதில்லை என்பதை உடைத்துக் காட்டுவேன்” என்று கூறினார்.

Related Stories: