100 டிகிரிக்கு மேல் வாட்டி வதைக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? சுகாதாரத்துறையினர் டிப்ஸ் கொழுப்பு குறைந்த உணவுகளை உண்பது நல்லது

வேலூர், ஏப்.10: தினந்தோறும் 100 டிகிரிக்கு மேல் வாட்டி வதைக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? என்று சுகாதாரத்துறையினர் டிப்ஸ் அளித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். கோடை காலத்தை எப்போதுமே அச்சத்துடன் தான் நாம் அணுகுகிறோம். காரணம் கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்கள், உடல் நலக்குறைவுகள் ஏற்படுகிறது. தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் தாகமும், சோர்வும் அதிகரித்து காணப்படும். காற்றின் வெப்பநிலை உயரும் பட்சத்தில் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகமுக்கியம். வெப்பம் அதிகரிக்கும்போது பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அவற்றைத் தடுக்க சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வெயில் காலங்களில் நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க, நிறைய தண்ணீர் குடிப்பது முக்கியம். ஆனால் நம்மில் பலருக்கும் வெயிலில் சென்றவுடன் குளிர்ந்த நீரை குடிக்கும் பழக்கம் உள்ளது. உடல் சூட்டை தணிக்க பலர் இப்படி குளிர்ந்த நீரை குடிப்பார்கள். ஆனால் அது தொண்டை புண் மற்றும் செரிமான அமைப்பை பாதிக்கும். எனவே சராசரி வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கோடையில் முட்டை, மீன், கோழிக்கறி போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டாம். இதனால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். முடிந்தவரை கொழுப்பு குறைந்த உணவுகளை உண்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. மண்பானை தண்ணீரை குடிக்கலாம். அதீத தாகத்துக்கு வெந்நீர் குடிக்கலாம். தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதைவிட மோர் மிகவும் சிறந்தது.

இதனுடன் அவ்வப்போது இளநீர், ஐஸ் மற்றும் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைச்சாறு போன்றவற்றையும் பருகி வரலாம். இதனால் உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படும். கோடை காலத்தின் போது காபி பருகுவது உடல்நலனுக்கு அவ்வளவு நல்லது கிடையாது. ஏற்கனவே நீரிழப்பு பிரச்னை இருந்தால், அடிக்கடி டீ, காபி குடிப்பதை தவிர்த்திடுங்கள். பொதுவாக பழச்சாறுகளில் காணப்படும் சர்க்கரை நமக்கு ஆற்றலை தருகிறது. ஆனால் இது ஆரோக்கியத்துக்கு அவ்வளவு நல்லது கிடையாது. எனவே சர்க்கரையைப் பயன்படுத்தாமல் பழச்சாறுகளை தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பழங்களை எப்போதும் பச்சையாக சாப்பிடுவது நல்லது. அதேபோல நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஜூஸுக்கு பதிலாக தண்ணீர் குடிப்பது நல்லது. வெயிலின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இச்சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும் உயர் வெப்பநிலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொது சுகாதாரத்துறையின் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கோடை வெயிலின் நேரடி வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்திட குடை, தொப்பி உள்ளிட்டவற்றை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

அத்தியாவசியத் தேவையின்றி பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோன்று, வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், அதிக வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும். பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமுடன் கண்காணித்துக்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக திறந்த வெளியில் வேலை செய்யும் போது, தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். சூரிய வெப்பம் அதிகமுள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்திற்கு செல்லலாம். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கலாம். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: