டிஜிட்டல் கைது என மிரட்டி விவசாயியிடம் ரூ.21 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை ஆதார், செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக

வேலூர், ஏப்.10: ஆதார், செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக டிஜிட்டல் கைது என்று கூறி விவசாயியிடம் ரூ.21 லட்சம் மோசடி தொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் 71 வயது விவசாயி. இவரது செல்போனிற்கு கடந்த 31ம் தேதி பேசிய மர்மநபர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து, முதியவரிடம் பேசுகையில், ‘உங்களது ஆதார் அட்டை, செல்போன் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பணம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்கள் என தெரிவித்தார். அதைக்கேட்ட முதியவர் தான் ஏதும் தவறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை என கூறியுள்ளார். மேலும், அந்த மர்மநபர், ஆதாரங்கள் உள்ளது உங்களை டிஜிட்டல் கைது செய்ய உள்ளோம்.

நான் சொல்வதை செய்தால் நேரடியாக கைது செய்வதை தவிர்க்க முடியும் எனக் கூறியுள்ளார். அதற்கு, வழக்கு விசாரணைக்காக வங்கி விவரங்களையும், பண பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்ய வேண்டும். எனவே உங்கள் கணக்கில் உள்ள பணத்தை தான் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்புங்கள். பரிவர்த்தனைகளை சரிபார்த்த பின் மீண்டும் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார். அதை உண்மை என நம்பிய முதியவரும் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.21 லட்சம் அனுப்பினார். அதன் பின் மர்மநபர் அவரை தொடர்பு கொள்ளவில்லை. பணத்தையும் திருப்பி அனுப்பவில்லையாம். தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் பணத்தை மீட்டு தரக்கோரி வேலூர் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: