கொரோனா காலத்திலேயே போயிருப்பார் என எடப்பாடி தரம்தாழ்ந்து பேச்சு மரணத்தை பார்த்து பயப்படுபவன் நான் அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

விழுப்புரம்: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்தில் நேற்று இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், விழுப்புரம் தொகுதி வேட்பாளர் டாக்டர் லட்சுமணன், திருக்கோவிலூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் பொன்.கௌதம சிகாமணி, செஞ்சி தொகுதி செஞ்சி மஸ்தான், விக்கிரவாண்டி தொகுதி அன்னியூர் சிவா, வானூர் தொகுதியில் கௌதம் திராவிட மணி, மயிலம் தொகுதி தேமுதிக வெங்கடேசன், திண்டிவனம் தொகுதி விசிக வன்னி அரசு ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ராமதாசுக்கு இன்றைக்கு பலர் நம்பிக்கை துரோகம் செய்திருக்கலாம். ஆனால், தலைவர் கலைஞரும், நானும், திமுகவும், திராவிட முன்னேற்றக் கழகமும், அவரை என்றைக்கும் சமூகநீதி போராளியாகத்தான் பார்க்கிறோம்; மதிக்கிறோம்.இன்று என்டிஏ என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணி என்பதே, துரோகிகளால் தமிழ்நாட்டிற்கு புதிய துரோகங்கள் செய்ய அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணி. இவர்களின் துரோகப் பட்டியலை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தெரியும்.

துரோகங்களால், தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்க நினைக்கும் என்டிஏ. என்டிஏ என்றால், உங்களுக்கு புரிவதுபோன்று ஈசியாக சொல்கிறேன். எந்த வளர்ச்சியும் இல்லாத கூட்டணி. இவ்வளவு துரோகங்களையும் செய்துவிட்டு, கூச்சமே இல்லாமல், மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். பழனிசாமி அவர்களே… எங்களது சாதனைக்கு மட்டுமல்ல; உங்களுடைய ஒவ்வொரு பொய்க்கும் என்னால் புள்ளிவிவரங்களோடு பதிலடி தர முடியும்.  தோல்வி பயத்தில் பழனிசாமி தினம் தராதரம் இல்லாமல் தரங்கெட்டு பேசுகிறார்.

இன்றைக்கு மாலை சென்னையில் என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால், இவரே போயிருப்பார் என்று என்னை பேசியிருக்கிறார். பழனிசாமி அவர்களே… என் மரணத்தை பற்றி பேசுகிறீர்களே… மரணத்தைப் பார்த்து கலங்கக் கூடியவனோ, பயப்படுகிறவனோ நான் அல்ல. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், 1976ல் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, 23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைக்கு ஆளானவன் நான். ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தவன் நான்.

பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்று என்னை சிறைக்கு அனுப்பி வைத்தவர் என்னுடைய ஆருயிர் தலைவர் என்னுடைய தந்தை கலைஞர் அவர்கள். கொடுஞ்சிறையின் கொடுமைக்கே பயப்படாதவன் நான், இந்தக் கொரோனாவுக்கா பயப்படப் போகிறேன். கொரோனா மேல் அனைவரும் பெரும் அச்சத்தில் இருந்தபோதே, அதற்கான றிறிணி உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்குள் சென்றவன்தான் இந்த ஸ்டாலின். இதுவரை யாருக்கும் சொல்லாததை இப்போது சொல்கிறேன்.

நான் கொரோனா வார்டுக்குள் செல்லப் போகிறேன் என்று யாரிடமும் நான் சொல்லவில்லை. கலெக்டர், அமைச்சர்கள், எல்.எல்.ஏ.க்கள், என் உதவியாளர்கள் என்று அனைவரும் இருந்தார்கள். ஆனால் யாரிடமும் நான் சொல்லவில்லை. இப்படி நான் சொல்லாமல் சென்ற காரணத்தினால், என் மனைவி துர்காவதி என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தார். இது சத்தியம்… மக்களைக் காக்க எந்தளவுக்கும் துணிச்சலாக செல்லக்கூடியவன். அதற்கெல்லாம் பயந்து அரசியல் தலைவராக நான் இல்லை.

பழனிசாமியின் கீழ்த்தரமான பேச்சைக் கேட்ட பிறகு, என்னுடைய வருத்தம் எல்லாம் என்ன தெரியுமா? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இனமானப் பேராசிரியர் என்று எத்தனையோ பண்பாடுமிக்க பெருந்தலைவர்களிடம் நேரில் பழகக்கூடிய நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நான், இன்று இவருக்கெல்லாம் பதில் சொல்லும் நிலை இருக்கிறதே என்று உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். அ.தி.மு.க. பொதுச் செயலாளரான பின்பு பழனிசாமி வென்றதே இல்லை.

தி.மு.க. தலைவரான பின் உங்கள் ஆதரவால் நான் தோற்றதே இல்லை. பாஜ எனும் பேரழிவை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர நினைக்கும் அடிமை பழனிசாமிக்கு, தமிழ்நாட்டு மக்கள் கடுமையான தண்டனையை இந்தத் தேர்தலில் கொடுக்க வேண்டும். உண்மையில், நடக்கும் தேர்தல் என்பது, டெல்லிக்கும் – தமிழ்நாட்டுக்கும் நடக்கும் தேர்தல். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பத்து தோல்வி பழனிசாமிக்கு, பதினோராவது தோல்வியை கொடுத்து விரட்ட வேண்டும்.

டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு, டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது! தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் ஆணவ பாஜவும், அடிமை அதிமுகவும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு, திராவிட முன்னேற்றக் கழகம்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். கலைஞரின் மகனாக கேட்கிறேன். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய மதசார்ப்பற்ற முற்போக்க கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சொல்லிவிட்டு அதிகாரிகளை மாற்றுவது ஏன்? பாஜவின் கிளை கழகமாக மாறிவிட்டது தேர்தல் ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

திருவண்ணாமலையில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கலைஞர் திடலில், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், திருவண்ணாமலை தொகுதி எ.வ.வேலு, கீழ்பென்னாத்தூர் தொகுதி கு.பிச்சாண்டி, ரிஷிவந்தியம் தொகுதி வசந்தம் க.கார்த்திகேயன், சங்கராபுரம் தொகுதி உதயசூரியன்,

செங்கம் தொகுதி மு.பெ.கிரி, கலசபாக்கம் தொகுதி பெ.சு.தி.சரவணன், வந்தவாசி தொகுதி எஸ்.அம்பேத்குமார், செய்யாறு தொகுதி ஒ.ஜோதி, ஆரணி தொகுதி கோ.மகாலட்சுமி, உளுந்தூர்பேட்டை தொகுதி ஜி.ஆர்.வசந்தவேல், கள்ளக்குறிச்சி தொகுதி விசிக கு.மாலதி, போளூர் தொகுதி தேமுதிக பி.சரவணன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வியக்கும் அளவுக்கு சாதனைகளாக நிறைந்ததுதான் திராவிட மாடல். ஆனா இதற்கு நேர் எதிரா வேதனை காலமா இருந்ததுதான் பழனிச்சாமியினுடைய ஆட்சி. அதனால்தான் ஊர் ஊரா போய் மக்களை எப்படி ஏமாற்றலாம்னு திட்டமிட்டு புலம்பிட்டு இருக்காரு. பழனிச்சாமியை பொறுத்தவரைக்கும் அவரும் ஒன்னும் செய்யல, நாம செய்யுற நல்லதையும் சகிச்சுக்க முடியல. திராவிட மாடல் அரசினுடைய சாதனைப் பட்டியல் மிக மிக நீளமானது. பழனிச்சாமியினுடைய துரோகப் பட்டியல் அதைவிடப் பல மடங்கு நீளமானது.

சாலமன் பாப்பையா தலைமையில ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அந்தளவுக்கு பழனிச்சாமியுடைய துரோக லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கும். அதிமுகவும் பாஜகவும் தனித்தனியா வந்தாலும் சரி, கூட்டணியாக வந்தாலும் சரி ரெண்டும் வேற வேற இல்லைன்னு தமிழ்நாட்டு மக்கள் கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கீங்க. மக்கள் கொடுக்கிற தொடர் தோல்விகளிலிருந்து எந்தப்பாடமும் கத்துக்காத இவங்ககிட்ட இருக்கக்கூடிய ஒரே ஆயுதம் என்ன தெரியுமா? அவதூறுகள், பொய் பிரசாரங்கள், மதக்கலவர சதித்திட்டங்கள்.

திமுக அரசு இந்து விரோத அரசுன்னு பாஜக சொல்ற பொய்யை பக்தர்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை. திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம், திருச்சின்னு இருக்கக்கூடிய கோயில் நகரங்கள் எல்லாம் இன்னைக்கு திமுகவோட கோட்டையா இருக்கு. இந்த எழுச்சியை, நமது எதிரிகளால் பொறுத்துக்க முடியல. இன்னைக்கு மத்தியானம் செய்தி வந்துச்சு பாத்தீங்களா? தமிழ்நாடு அரசினுடைய தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரை மாத்தியிருக்காங்க.

நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜ கிளைக் கழகமா மாறியிருக்கு. இதே தேர்தல் ஆணைய பொறுப்பில் உள்ளவர்கள் சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கு, நிர்வாகத்துல எல்லா ஒத்துழைப்பும் கிடைக்குது’னு பேட்டி குடுத்திருக்காங்க. இப்போ கடந்த ஒரு வாரமா பல அதிகாரிகளை மாற்றினால் என்ன அர்த்தம்? பாஜ ஆளும் மாநிலங்களில் நடக்கிற தேர்தல்ல இப்படித்தான் அதிகாரிகளை கூண்டோடு மாத்துறாங்களா? பீகாரில் தேர்தல் நடந்தபோது,

இப்படித்தான் தலைமைச்செயலாளர், டிஜிபியை எல்லாம் மாத்துனாங்களா? இங்க மட்டும் முக்கிய அதிகாரிகள், அதுவும் சேலம் கலெக்டர் போன்றவர்கள் மாற்றப்படுகிறார்கள் என்றால், யாருக்கு உதவுவதற்காக? என்று மக்களுக்கு சந்தேகம் வராதா? இதனாலெல்லாம் திமுகவோட வெற்றியை தடுத்து நிறுத்த முடியும்னு நினைக்கிறாங்க. அது முடியுமா? எத்தனை அதிகாரிகளை மாத்துனாலும் இன்னும் ஒரு மாசத்துல திரும்ப நமது திராவிட மாடல் அரசுதான் அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கப் போகுது.

2021லயும் இதே மாதிரிதான் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டுதான் மாபெரும் வெற்றியை பெற்றோம். இப்போது மீண்டும் வரலாற்று வெற்றியை பெறுவோம். நம்மளோட கவலை எல்லாம், நேர்மையற்ற பாஜகவுக்காக நேர்மையாக, நடுநிலையாக, அரசியல் குறுக்கீடு இன்றி தன்னிச்சையாக இயங்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் மதிப்பு இன்றைக்கு கேள்விக்குறியாகியிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று சொல்லிக்கிற இந்தியாவின் சுதந்திரமான தேர்தலுக்கு இது பேராபத்து. இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு தக்க பதிலடியை மக்கள் கொடுக்கணும். பாஜகவோட டபுள் இன்ஜின் வந்தால் எல்லா திட்டத்தையும் நிறுத்திடுவாங்க. அதுக்கு நாம இடம் கொடுக்க கூடாது.

மீண்டும் சொல்றேன், தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயக போரில் அரசியல் விருப்பு, வெறுப்பு எல்லாவற்றையும் கடந்து தாய் தமிழ்நாட்டை காக்க எல்லாரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைத்தான் ஆதரிக்கணும். நல்லாட்சி தொடர்ந்திட, தமிழ்நாடு வென்றிட, ஆதரவு தாருங்கள். வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்துக்கு பின் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ அழகுவேல் பாபு மற்றும் நகரசெயலாளர் பாபு ஆகயோர் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Related Stories: