சென்னை: டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக அதிமுக நிர்வாகிகள் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குகளை தொடர்ந்துள்ளதாக டான்ஜெட்கோ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
கடந்த 2021 முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் 397 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறி, சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இ.சரவணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரும், சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோரி அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறப்போர் இயக்கத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுரேஷ், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே விலையை குறிப்பிட்டதால் தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார். சரவணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவச்சாரி, இந்த வழக்கில் இறுதி விசாரணை தொடங்கிய நிலையில் ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்று கூறி புகார்களை முடித்து வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அளித்துள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
டான்ஜெட்கோ தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், 2021-23ம் ஆண்டுகளில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக 2025ல் புகார் கொடுத்துவிட்டு வழக்கு தொடர்ந்த அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இருவரும் அரசியல் உள்நோக்கத்தோடும், விளம்பர நோக்கத்தோடும் வழக்கை தொடர்ந்துள்ளனர். அவர்கள் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தில் அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரே விலையை குறிப்பிடுவது என்பது 1987ம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் நடைமுறை தான். ஒரே விலையை குறிப்பது என்பது பொதுவானது என்று வாதிட்டார். அரசு தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணை இன்றும் தொடரவுள்ளது.
