சென்னை: அதிமுகவை இயக்குவது டெல்லி பாஜ தான் என்றும், கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் ஒன்றிய பாஜ அரசு செயல்படுகிறது என்றும் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார். திமுக துணை பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான திருச்சி சிவா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை தங்களின் யுக்திகளினால் ஆக்கிரமித்த பாஜ, தமிழ்நாட்டிலும் கால் வைக்க முயற்சிக்கிறது.
அதை தடுப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி களத்தில் இயங்கியுள்ளது. 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாட்டை இந்தியாவின் பல நிலைகளில் உயரிடத்தில், முதல் இடத்தில் அமர வைத்திருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள் கொள்கை அளவில் வலிமையான கூட்டணியை அமைத்திருக்கிறோம். அதிமுக தன்னுடைய தலைமையில்தான் இயங்குவதாக சொன்னாலும் கூட அவர்களை இயக்குவது, டெல்லியில் இருக்கும் பாஜ தான்.
மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதில் பாஜ முழு மூச்சாக செயல்படுகிறது. அவர்கள் நிறைவேற்றிய சட்டங்களில் பெரும்பாலான சட்டங்கள் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாக, மாநிலங்களின் அதிகாரங்களில் அத்துமீறுவதாகவே அமைந்திருக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தி மொழியை எந்த வகையிலும் திணிப்பது என்ற ஒரு முயற்சி, புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவில் இருக்கிற கல்வி நிலையை பின்னோக்கி இழுத்துச் செல்லும்.
பாஜ பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாடு முழுமையாக வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் மதுரைக்கு வந்த மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸ் பேசுகிற போது நீங்கள் பாஜவை வெற்றி பெற செய்தால் தான் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரும் என்று பேசி இருக்கிறார். தமிழ்நாடு அரசு விரிவான திட்ட அறிக்கையை அனுப்பியும், போதிய மக்கள் தொகை இல்லை என நிராகரித்திருக்கிறார்கள். ஆனால், இதைவிட குறைந்த மக்கள் தொகை உள்ள பல மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2018ம் ஆண்டு பிரதமர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2019ல் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், அங்கு 30 விழுக்காடு பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. அதே 2015ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர், கவுகாத்தி மற்றும் கோரக்பூர் ஆகிய இடங்களிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. பட்டிண்டாவில் அறிவிக்கப்பட்ட மருத்துவமனை தற்போது முழுமையாகச் செயல்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் மட்டும் பணிகள் தேங்கி நிற்பது, இம்மாநிலத்தின் வளர்ச்சியில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. தமிழ்நாடு எல்லா வகையிலும் முன்னோக்கி சென்று சென்றுகொண்டிருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் என்று சொல்வதில் மராட்டிய மாநிலத்தை விட தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. குடியுரிமை சட்ட திருத்தம் வந்தபோது அதை ஆதரித்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி எந்த முகத்தோடு ஓட்டு கேட்கிறார்?
மகளிருக்கு உரிமை தொகை 1 கோடியே 31 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. விடியல் பயணம் திட்டத்தை மோடி எதிர்த்திருக்கிறார். மாநில உரிமைகளுக்காக போராடுவோம், நாட்டின் ஒற்றுமைக்கு ஒருபோதும் எதிராக இருந்ததில்லை. பாதுகாப்பு என்று வரும்போது முதல்வர் முன்னணியில் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* தடைகளை தாண்டி முன்னேறும் தமிழ்நாடு
தொகுதி மறுசீரமைப்பு பற்றி முதல்வர் வழிகாட்டுதலின்படி அனைத்து கட்சி கூட்டத்தில் பேசுவோம். தேர்தல் நேரத்தில் நாடாளுமன்றத்தை கூட்டுவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. இது ஒரு மலிவான தந்திரம். அதிமுக ஆட்சியில் கஞ்சா ஒழிக்கப்படும் என்று சொல்வது வேடிக்கை. அவர்களுடைய ஆட்சியில்தான் குட்கா ஊழலில் அமைச்சர்களும் அதிகாரிகளும் சிபிஐ வழக்கில் சிக்கினார்கள்.
திமுக அரசு போதைப்பொருள் ஒழிப்பில் தீவிரமாக இருக்கிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிகாலத்தில் 50 லட்சம் கோடியாக இருந்த ஒன்றிய அரசின் கடன் பிரதமர் மோடி ஆட்சியில் 214 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு அவர்கள் முதலில் பதில் சொல்லட்டும். தமிழ்நாட்டின் கடன் வரம்பிற்குள்ளேயே இருக்கிறது. தமிழ்நாடு எல்லா தடைகளையும் தாண்டி முன்னேறி வருகிறது, என திருச்சி சிவா கூறியுள்ளார்.
