கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை முதற்கட்ட தொடர் அணுபிளவு நிலையடைந்தது: அணுமின் நிலைய நிர்வாகம் தகவல்

சென்னை: கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை முதற்கட்ட தொடர் அணு பிளவு நிலையை அடைந்துள்ளது, என்று அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையம் (பாவினி) நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் அணுசக்தி திட்டத்தில் ஒரு மைல்கல் சாதனையாக 500 மெகாவாட் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை கட்டுப்படுத்தப்பட்ட முதல் தொடர் அணு பிளவு நிலையை வெற்றிகரமாக அடைந்துள்ளது. இது, நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வழங்குவதிலும், உள்நாட்டு அணு தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதிலும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க படியாகும்.

அணு உலை அமைப்புகளின் பாதுகாப்பை முழுமையாக ஆய்வு செய்து, அனுமதி வழங்கிய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்னர் அணுசக்தி துறை செயலாளர் மற்றும் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அஜித்குமார் மொஹந்தி, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார், ஜி.பிள்ளை நிறுவனத்தின் பொறுப்பு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அல்லு அனந்த், நிறுவனத்தின் முன்னாள் தலைவர், நிர்வாக இயக்குநர் மற்றும் ஹோமி சேத்னா தலைவர் கே.வி.சுரேஷ்குமார், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் சி.ஜி.கர்ஹத்கர் ஆகியோர் முன்னிலையில் முதல் தொடர் அணு பிளவு எட்டப்பட்டது.

பி.எப்.பிஆரின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வடிவமைப்பு, அணுசக்தி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தால் உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டது. மேலும், இது
அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமான பாவினி நிர்வாகம் மூலம் கட்டப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முன்மாதிரி வேக ஈனுலை இந்தியாவின் நீண்டகால அணுசக்தி உத்தியின் ஒரு முக்கிய தூணாகும். வழக்கமான வெப்ப அணு உலைகளைப் போல் இல்லாமல் (பி.எப்.பி.ஆர்) யுரேனியம் – புளூட்டோனியம் கலப்பு ஆக்சைடு எரிபொருளை பயன்படுத்துகிறது. பி.எப்.பி ஆரின் மையப்பகுதி யுரேனியம் – 238ல் சூழப்பட்டுள்ளது. வேக நியூட்ரான்கள், வளம்மிக்க யுரேனியம்-238ஐ பிளவுபடக்கூடிய புளூட்டோனியம்-239 ஆக மாற்றுகின்றன.

இது அணு உலை பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக எரிபொருளை உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த அணு உலை, தோரியம் – 232ஐ பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்பு மாற்றத்தின் மூலம் தோரியம் – 232, யுரேனியம் – 233 ஆக மாற்றப்படும். இது இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் 3ம் கட்டத்திற்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும். இந்த தனித்துவமான திறன் அணு எரிபொருள் வளங்களின் பயன்பாட்டை கணிசமாக மேம்படுத்துவதோடு, நாட்டின் வரையறுக்கப்பட்ட யுரேனியம் இருப்புகளிலிருந்து மிக அதிக ஆற்றலைப் பிரித்தெடுக்கவும் உதவுகிறது. மேலும், இது எதிர்காலத்தில் தோரியத்தை பெரிய அளவில் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கிறது.

வேக ஈனுலை தொழில்நுட்பமானது, தற்போதுள்ள அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளுக்கும், எதிர்காலத்தில் நிறுவப்படவுள்ள தோரியம் அடிப்படையிலான அணு உலைகளுக்கும் இடையே ஒரு முக்கியப் பாலமாக அமைகிறது.
இந்த, மைல்கல்லை அடைவது இந்தியாவின் உள்நாட்டு வடிவமைப்பு, பொறியியல் மற்றும் உற்பத்திச் சூழலமைப்பின் வலிமையை வெளிப்படுத்துகிறது. இந்த அணு உலையானது, மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், உயர், வெப்பநிலை திரவ சோடியம் குளிர்விப்பான் தொழில்நுட்பம் மற்றும் அணுப் பொருட்களை மறுசுழற்சி செய்ய உதவும் ஒரு எரிபொருள் சுழற்சி அணுகுமுறை ஆகியவற்றை கொண்டுள்ளது.

இதன் மூலம், ஆற்றலின் நிலைத்தன்மை மேம்படுத்தப்பட்டு மற்றும் கழிவுகளும் குறைக்கப்படுகின்றன. பெரும்பாலும் உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் மற்றும் அணு உலையின் முக்கிய பாகங்களை பயன்படுத்தி அணு உலையின் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் கட்டுமானத்திற்கு பங்களித்த கனிசமான எண்ணிக்கையிலான விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில் பங்காளர்கள் அர்ப்பணிப்பையும் இந்த திட்டம் பிரதிபலிக்கிறது. ஆற்றல் உற்பத்திக்கு அப்பால் வேக ஈனுலை திட்டம் அணு எரிபொருள் சுழற்சி தொழில்நுட்பங்கள், மேம்பட்ட உலோகங்கள், உலை இயற்பியல் மற்றும் பெரிய அளவிலான பொறியியல் ஆகியவற்றில் தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்துகிறது.

இந்த திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் அறிவும், உள்கட்டமைப்பும் எதிர்கால அணு உலை வடிவமைப்புகளுக்கும், அடுத்த தலைமுறை அணு தொழில் நுட்பங்களுக்கும் ஆதரவளிக்கும். இந்தியா தனது தூய்மையான ஆற்றல் தொகுப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதால், வேக ஈனுலைகள் அதிக வெப்பத்திறனுடன் நம்பகமான, குறைந்த கார்பன் கொண்ட அடிப்படை மின்சாரத்தை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும். முதல் தொடர் அணு பிளவு நிலையை அடைவது என்பது ஒரு தொழில்நுட்ப மைல்கல் மட்டுமல்ல விக்சிட் பாரத்க்கான தன்னிறைவு பெற்ற ஆற்றலுக்கான ஒரு முக்கிய படியும் ஆகும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

Related Stories: