சென்னை: படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள், நடிகர்கள் பின்னால் சென்று காயப்பட்டால் உங்களுக்கு தான் ஆபத்து, என்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு, நேற்று விமானம் மூலம் அங்கிருந்து சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கமலுடன் நான் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 நாட்களில் முடிய உள்ளது. ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகும் தேதியை, தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும். ஜனநாயகன் திரைப்படம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நடிகர்கள் பின்னால் சென்று ஏதாவது அடிபட்டால், உங்களுக்கு தான் ஆபத்து.
படிக்கிற வயதில், முதலில் படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரத்தை தவற விட்டு விட்டால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களுடைய சிந்தனை செயல், அனைத்தும் படிப்பில் தான் இருக்க வேண்டும். இளைஞர்கள் முதலில், தங்களது உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு நான் கொடுக்கக்கூடிய அறிவுரை என்னவென்றால், முதலில் குடிப்பழக்கம், கஞ்சா உள்ளிட்டதற்கு அடிமையாகி விடக்கூடாது. அதில் சென்றால் அவர்களுடைய வாழ்க்கை கெட்டு போய்விடும். நீங்கள் மட்டுமல்லாமல், உங்களை சம்பந்தபட்ட தாய், தந்தை மற்றும் அனைவரின் வாழ்க்கையும் நரகமாக்கி விடும். அப்படிப்பட்ட நண்பர்களின் அருகில் கூட நீங்கள் சென்று விடாதீர்கள். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
