விழுப்புரம்: விழுப்புரம் அருகே சர்வீஸ் தண்டவாளத்தில் சென்ற ரயில் இன்ஜின் தடம் புரண்டது. இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிக்கான ரயில் இன்ஜின் நிறுத்தி வைக்கும் யார்டு மற்றும் சர்வீஸ் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை இணைக்கும் ரயில் இன்ஜின், விழுப்புரத்தில் இருந்து கண்டம்பாக்கத்துக்கு சென்றது.
அப்போது சர்வீஸ் தண்டவாளத்தில் பின்பக்கமாக செல்லும்போது எதிர்பாராதவிதமாக கடைசி எல்லை பகுதிக்கு சென்று தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கி தடம்புரண்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரயில் இன்ஜினில், பெட்டிகள் ஏதும் பொறுத்தப்படாத நிலையில், 2 பைலட் மட்டுமே இருந்த நிலையில் இருவரும் காயமின்றி தப்பினர். தொடர்ந்து விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட ரயில்வே ெதாழில்நுட்ப பணியாளர்கள் மற்றொரு சிறப்பு ரயில் மூலம் அங்கு விரைந்து வந்து தண்டவாள பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பொக்லைன் இயந்திரம், கிரேன் மூலம் ரயில் இன்ஜின் தண்டவாளத்தில் மீண்டும் தூக்கி வைத்தனர். மெயின் தண்டவாளத்தில் இந்த விபத்து நடந்திருந்தால் காட்பாடி மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பலமணி நேரம் பாதிக்கப்பட்டிருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே இந்த விபத்து நடந்த பகுதிக்கு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
