நாகர்கோவில் டவுன் – இரணியல் இடையே புதிய தண்டவாளத்தில் 75 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கம்: அதிவேக சோதனையில் திருப்தி இல்லை என அறிக்கை

 

நாகர்கோவில்: நாகர்கோவில் டவுன் – இரணியல் இடையே புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதனால் தற்போது 75 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரயில்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் ரயில்வே வழித்தடத்தில் 87 கி.மீ தூரம் இரட்டை ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. இரட்டை ரயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் 2024 -2025 நிதி ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.940 கோடி ஒதுக்கீடு செய்திருந்தனர். பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்பதால், ரூ.575 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த வழித்தடத்தில் கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வரை பணிகள் முடிவடைந்து, ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பாறசாலை – திருவனந்தபுரம் இடையே 75 சதவீத பணிகள் முடிந்துள்ளன. 87 கி.மீ நீளமுள்ள திருவனந்தபுரம் – கன்னியாகுமரி வழித்தடத்தில், 34 கி.மீ தூரத்திற்கான இரட்டைப் ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இரணியலில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான 53 கி.மீ நீளமுள்ள இரண்டாவது ரயில் பாதையின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதில், 8 கி.மீ நீளமுள்ள திருவனந்தபுரம் – நேமம் வழித்தடம் 2026 மார்ச் மாதத்தில் நிறைவடைவதாகக் கூறப்பட்ட நிலையில், பணிகள் அங்கும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன என பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.

இந்தநிலையில் சமீபத்தில் நாகர்கோவில் டவுன் – இரணியல் இடையே சுமார் 14 கி.மீ. தூரம் பணிகள் முழுமையாக முடிவடைந்து, சோதனை ஓட்டம் நடைபெற்றது. 2 நாட்கள் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனை தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. திருவனந்தபுரம் தலைமைப் பாதுகாப்பு ஆணையர் சுமீத் சிம்கலின் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், நாகர்கோவில் டவுன் – இரணியல் 2வது ரயில் பாதை கட்டுமானத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிக்கல்களை தீர்க்கும் வரை ரயில்களின் அதிகபட்ச வேகம் இந்த பகுதியில் 75 கி.மீ. ஆக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என கூறி உள்ளார்.

திருவனந்தபுரம் – கன்னியாகுமரி ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியான சமீபத்தில் முடிந்த 14 கி.மீ. பிரிவில் தான் இந்த சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறியதாவது: திட்ட கருத்துருவின் படி மார்ச் மாதத்திற்குள் நாகர்கோவில் டவுன், இரணியல் இடையே பணிகளை முடிக்க வேண்டும். அதன்படி கட்டுமானம் சரியாக முடிக்கப்பட்டது என்று கணக்கு காட்டுவதற்காக, இந்த பணிகள் நிறைவடைவதற்கு முன்பே அவசரமாகத் திறந்து வைக்கப்பட்டு ரயில்களை இயக்கியது தான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் நிறைவடைவதற்கு முன்பு, பாதுகாப்பு ஆணையர் ஆய்வுக்காக அழைக்கப்பட்டார். பொதுவாக புதிய ரயில் பாதைகளில் 120 கி.மீ வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தி சோதனை செய்யப்படும். ஆனால் நாகர்கோவில் டவுன் – இரணியல் வழித்தடத்தில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் மட்டுமே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. அதுவும் திருப்தியாக இல்லை. இதனால் தான் 75 கி.மீ. வேகத்தில் மட்டுமே இந்த புதிய பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

தற்போது ​​இவ்வழித்தடத்தை மின்மயமாக்கும் மீதமுள்ள பணிகளும், இரணியல் ரயில் நிலைய யார்டு கட்டுமான பணிகளும் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இதையும் அவசர கதியில் முடிக்காமல் முறையாக முடிக்க வேண்டும். இந்த பணிகள் முடிந்தவுடன், இப்பகுதியில் ரயில்களின் வேகம் மணிக்கு 100 கி.மீ. ஆக இருக்கும் என்றனர்.

Related Stories: