பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு உதிர்வா பூஜை இன்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது.
அன்று முதல் ஒவ்வொரு நாளும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் இரவு சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் ஏப்.1 ம் தேதி நடைபெற்றது. தேரோட்டம் முதல் நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பங்குனி உத்திரதிருவிழாவின் எட்டாம் நாளான இன்று உதிர்வா பூஜை நடைபெற்றது. இதையொட்டி தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.
உதிர்வா பூஜையை முன்னிட்டு நாட்டார்மங்கலம், செட்டிகுளம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து சாமிக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
