ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் முரம்பு மண் கடத்திய ஜேசிபி, டிப்பர் லாரி பறிமுதல்

*தப்பியோடிய நபர்களுக்கு போலீஸ் வலை

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் அருகே உள்ள தாமரைக்குட்டை மலையடிவாரத்தில் சட்டவிரோதமாக இரவும் பகலுமாக முரம்பு மண், மணல் கடத்தப்படுவதாக வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, நேற்று அதிகாலை 5 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் பெரிய ஏரியூர், தாமரைகுட்டை, குரவன்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது தாமரைகுட்டை மலையடிவாரத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் டிப்பர் லாரி ஒன்று வந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆனால், போலீசாரை பார்த்ததும் லாரியை நிறுத்தாமல் மர்ம நபர்கள் வேகமாக ஓட்டி சென்றனர். இதனால் போலீசாரும் லாரியை விரட்டி சென்றனர்.

ஒரு கட்டத்தில் போலீசார் துரத்தி வருவதை பார்த்த மர்ம நபர்கள் ஒரு முட்புதரில் லாரியை நிறுத்தி விட்டு அதிலிருந்த மர்ம நபர்கள் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.

பின்னர், லாரியை சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி சட்டவிரோதமாக முரம்பு மண் கடத்திய வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் லாரியின் உரிமையாளர் பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்த குமரன்(40) என்பது தெரிய வந்தது.

அதேபோல், மலையடிவாரம் அருகே உள்ள ஏரியில் சோதனை நடத்திய போது அங்கு ஜேசிபி மூலம் சிலர் முரம்பு மண் கடத்திய கொண்டு இருந்தனர்.அவர்கள் போலீசாரை பார்த்ததும் ஜேசிபியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

விசாரணை நடத்தியதில் அதன் உரிமையாளர் பின்னத்துரை பகுதியை சேர்ந்த நவீன் என்பது தெரிய வந்தது.இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேசிபி மற்றும் முரம்பு மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடி தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: