எடை குறையும் ரேஷன் பொருட்கள்: ஊழியர்கள் புலம்பல்

திருவள்ளூர், பிப்.21: திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, சர்க்கரை மூட்டையில் 5 கிலோ வரை குறைவதாக ஊழியர்கள் புலம்புகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 5.20 லட்சம் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. மொத்தம் 1,020 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. ரேஷன் பொருட்கள் நுகர்பொருள் வாணிக கழக கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதில், அரிசி, சர்க்கரை ஆகியவை 50 கிலோ கொண்ட சிப்பமாக அனுப்பப்படும். சமீப காலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் அரிசியின் எடை மூட்டைக்கு 3 முதல் 5 கிலோ வரை குறைகிறது. அதேபோல் சர்க்கரை 5 முதல் 7 கிலோ வரை குறைகிறது. தவிர லோடுமேன்கள் ஊசியால் குத்தி ஒரு மூட்டைக்கு 2 கிலோ வரை அரிசி, சர்க்கரை எடுப்பதாகவும் ரேஷன் கடை ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ரேஷன் ஊழியர்கள் கூறுகையில், “இருப்பு குறைந்தால் எங்களுக்கு தான் அபராதம் விதிக்கின்றனர். ஒரு கிலோ குறைந்தால் இதுவரை அரிசிக்கு ₹25, சர்க்கரைக்கு ₹75 அபராதம் வசூலித்தனர். தற்போது அதனை 10 மடங்காக உயர்த்துவதாக கூறியுள்ளனர். இதனால் எங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்” என்றனர். எனவே, அனைத்து ரேஷன் கடைகளிலும் மூட்டைகளை இறக்கும்போது, ஒவ்வொரு மூட்டையையும் எடைபோட்டு, சரியான அளவில் அரிசி, சர்க்கரை வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>