ஆயுள் தோஷம்
ஜோதிடத்தில் ஒருவரின் ஆயுளை அறிய லக்னம், லக்னாதிபதி, ஆயுள் ஸ்தானம், ஆயுள் ஸ்தான அதிபதி மற்றும் ஆயுட்காரகன் சனி ஆகியோரின் நிலைகளை ஆராய வேண்டும். 8-ஆம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து சுபர் தொடர்பின்றி திசா புத்தி நடத்தும் காலங்களில் சிலருக்கு ஆயுள் பங்க பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. எட்டாம் இடத்தில் ஆயுள்காரகன் சனி இருந்தால் பாவக காரகோ நாஸ்தி கிடையாது. ஆனால், 8ல் உள்ள சனி நித்ய கண்டம், பூரண ஆயுசு என்ற நிலையை ஏற்படுத்தி விடும்.
வச்சிரவல்லி
பிரண்டை கொடித் தாவரமாகும். மருத்துவ பயன்பாடு உடைய அற்புத மூலிகையான பிரண்டை காடுகள் வேலிகளில் வளர்கிறது. பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளரும் தன்மை உடையதாகும். தானே விளையும் பிரண்டையின் மகத்துவங்கள் பற்றி பலர் அறிந்திராத காரணத்தினால் பிரண்டை வீணடிக்கப்படுகிறது ரத்த மூலம் வாயு பிடிப்பு கை – கால் குடைச்சலுக்கான சிறந்த மருந்தாக பிரண்டை விளங்குகிறது. பிரண்டை வச்சிரவல்லி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. பிரண்டையின் வகைகளாக சாதாரண பிரண்டை சிவப்பு பிரண்டை, உருட்டு பிரண்டை, முப்பிரண்டை, தட்டை பிரண்டை ஆகியன குறிப்பிடப்படுகின்றன.
இதில் சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டங்களை கொண்ட பிரண்டை அதிகமாக காணப்படும் வகையாகும். சிலர் உடல் மெலிந்து எப்போதும் சோகமாக காணப்படுவார்கள். இவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும். பெத்த வயித்துல பிரண்டையை வைத்து கட்டி இருக்கலாம் என்பது அந்த காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கிற பிரபலமான வசவு வாசகம்.
எமதர்மராஜனின் விருட்சம்
பிரண்டை எமதர்ம ராஜனின் விருட்சமாக குறிப்பிடப்படுகிறது. எமதர்மனின் விருட்சமான பிரண்டையை நினைத்தாலே யோகம்தான். நோய் பாதிப்பு உள்ளவர்கள் பிரண்டையை பார்த்து வந்தால் நோய் குணமாகும். எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க செல்போனில் டிஸ்பிளே பிக்சராக பிரண்டை படத்தை சனிக்கிழமை அன்று வைத்து பார்த்து வரவும். எமதர்மனின் சகோதரரான ஆயுட்காரகன் சனீஸ்வர பகவானின் கிழமையான சனிக்கிழமை அன்று பிரண்டைத் துவையல் சாப்பிட்டுவந்தால் ஆயுள் பங்க தோஷங்கள் நீங்கும். பிரண்டை துவையலில் நல்லெண்ணெய் விட்டு சூடான சாதம் சாப்பிடவும்.
மாதம் ஒரு முறை பரணி, சதயம் நட்சத்திரங்கள் வரும் நாட்களில் பிரண்டை துவையல் சாப்பிட்டு வந்தால் ஆயுள் விருத்தி ஏற்படும் ஏனெனில் எமதர்ம ராஜன் பரணி நட்சத்திரத்திற்கு அதி தேவதையாகவும், சதயம் நட்சத்திரத்திற்கு தேவதையாகவும் குறிப்பிடப்படுகிறார். செய்வினை தோஷம் நீங்க பிரண்டை கொழுந்தை சனிக்கிழமை அன்று பறித்து அரைத்து அன்றே துவையலாக சாப்பிட வேண்டும் தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளில் சாப்பிட வேண்டும். பிரண்டை துவையல் சாப்பிட்டால் தொடர் பிரச்னைகள் விபத்துக்கள், அகால மரணங்கள் ஏற்படாது.
பிரண்டை செடியை வீட்டின் பின்புறம் வளர்ப்பதன் மூலம் எதிர்மறை சக்திகள் மற்றும் கண் திருஷ்டி முன் ஜென்ம வினைகள் நீங்கும். குடும்பத்தில் வசியம் ஏற்படும். திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலில் எமன், பிரண்டையால் சாதம் செய்து சிவனுக்கு நிவேதித்து வழிபட்டாராம். அதனால் பிரண்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆயுள் வளரும்.பிரண்டை தீபம் நான்கு கணுக்கள் உள்ள பிரண்டையை எடுத்து நான்கு துண்டுகளாக வெட்டி தனித்தனியாக நான்கு மண் அகல்விளக்கில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி மூலம் தீபம் ஏற்றவும். தொடர்ந்து 48 நாட்கள் செய்யவும். இதன் மூலம் கடன் பிரச்னைகள் தீரும். ஆயுள் விருத்தி ஏற்படும்.
