மனதுக்கினியானை மனதில் நிறுத்துவோம்!

மனதுக்கினியான் என்று ஆண்டாள் நாச்சியாரால் திருப்பாவையில் கொண்டாடப்பட்ட ஸ்ரீராமபிரான், என்றுமே அனைவரின் மனங்களுக்கும் இனிமையானவராகவே இருந்து நம் மனங்களுக்கும், வாழ்க்கைக்கும் இனிமையை சேர்த்து கொண்டே தான் இருக்கிறார். வால்மீகி நாரத மகரிஷியிடம் கேட்ட பல கேள்விகளை பற்றிய குறிப்புகளை புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

அதில் தன் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும், கோபத்தை வென்றவனும் யார் என்ற கேள்வியும் ஒன்று. அதற்கு நாரத மகரிஷி, இக்ஷ்வாகு வம்சத்தில் தோன்றியவரும் ராமன் என்று மக்களால் அழைக்கப்படுபவனும்தான் கோபத்தை வென்றவர் என்கிறார். நாரதரால் மனதுக்கினியானாக அடையாளம் காணப்பெற்ற ராமபிரானை, தம் ராமாயண காவியத்தில், “ஜித க்ரோத:” என்றே வால்மீகி அழைக்கிறார். அதாவது, ராமபிரானிடம் கோபமே கிடையாது என்று வால்மீகி சொல்லவில்லை. கோபத்தை வென்றவர் ராமன் என்கிறார்.

தன் பக்தர்களை யாராவது துன்புறுத்தினால் தனக்கு கோபம் வரும் என்பதை தானே நரசிம்ஹ அவதாரத்தின் வழி காட்டிக்கொடுத்திருக்கிறார் பகவான்? கோபத்தீயை தன் கட்டுக்குள் வைத்து கொண்டிருந்த ராமபிரான் அதிகம் கோபம் கொண்டது, தன் பக்தனான அனுமனை, ராவணன் கணைகளால் அடித்து வருத்திய போதுதான். அதனால் தானே சரமழையை பொழிந்தான் அந்த சாகேத ராமன்?

“உய்த்த கணையால் அத்திர அரக்கன் முடி பத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திறலோன்” என்று ஸ்வாமி நிகமாந்த தேசிகன் தன் அதிகாரசங்கிரகத்தில் அந்த சரமழை தொடுத்த வைபவத்தை போற்றியுள்ளார்.ராமாவதாரமும் வேதமும் ஒன்றே! வேதத்தில் மந்திர ரூபமாக உள்ளதே ராமாயணத்தில் ஸ்லோகமாக அமைந்திருக்கிறது. வேத வழியில், வேதம் காட்டிய வழியில் சென்றவன் என்ற பெருமை ஸ்ரீராம பிரானுக்கு உண்டு. ராமாயணத்தின் தியான ஸ்லோகம்,

“வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே
வேத: பிராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா”
– என்கிறது.

இதன் அர்த்தம் “எவன் வேதத்தால் அறியப்பட வேண்டியவனோ, வேதம் எவனைக் கொண்டாடுகிறதோ அவன் தசரதனுடைய திருக்குமாரனாய் ராமனாய் வந்து அவதரித்த போது அவனையே எப்போதும் பறை சாற்றிக்கொண்டிருக்கும். வேதமானது, வால்மீகி மூலமாக ராமாயணவடிவம் கொண்டன என்பதே ருக் வேதம் என்பதில் “ரு” உள்ளது. அதைத்தான் கொஞ்சம் மாற்றி, “ரா” என்கிறார் வால்மீகி. சாமவேதம் என்ற சொல்லில் “ம” என்றது “மா” ஆயிற்று. யஜுர் வேதத்தில் உள்ள “ய” என்பதையும், அதர்வண வேதத்தில் உள்ள “ண” என்பதையும் சேர்த்தார் வால்மிகி மகரிஷி. ஒவ்வொரு வேதத்தின் பெயர்களிலிருந்து ஒவ்வொரு எழுத்தையும் சேர்த்து “ராமாயணம்” என்று பெயரிட்டார்.

வேத வேட்தியனான பரமாத்மா, பரம சுலபனாக எல்லோருக்கும் கிடைக்கும்படியாக ராமபிரானாக வந்துதித்தான். ராமாயணம் வேதம். வேத புருஷன் ராமன். ராமாவதாரத்தில், ஸ்ரீ ராமனாக அவதரித்து, மனிதன் வாழ வேண்டிய மனித தர்ம வழியைக்காட்டினான். ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்து, பல தர்மங்களை பகவத் கீதையின் மூலம் உபதேசித்தான். முதலில் அனுஷ்டானம் அதாவது பின்பற்றுதல் அதன் பிறகு உபதேசம் என்று தர்மம் இருப்பதால், கிருஷ்ணாவதாரத்தில் தான் உபதேசிக்கப் போகின்ற தர்மங்களை முன்னதாக, ராமாவதாரத்தில் திருமால் தானே பின்பற்றி காண்பித்தான்.

ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்றால் அது ராமபிரான் தானே? சத்தியத்தை மட்டுமே பேசக்கூடிய சத்ய சீலன் அவனே. தன்னிடம் சரணாகதி அடைந்தவர்களை காப்பாற்றியே தீருவேன் என்ற சத்ய சங்கல்பத்தோடு வாழ்ந்து காட்டியவர் அல்லவா அவர்? ராமபிரானின் பெருமையைப்பற்றி அவனை வெறுத்தவர்கள், அவனை எதிரி என கருதியவர்கள்கூட புகழ்ந்து பேசியதை ராமாயணத்தில் பல இடங்களில் நாம் பார்க்கலாம்.

ராவணனின் கோஷ்டியை சேர்ந்தவர்களில், அகம்பனன் என்ற ஒருவன் இருந்தான். அகம்பனன் என்றாலே எதற்குமே பயப்படாதவன் என்றே அர்த்தம். அவன் ஒரு நாள் தன் உடலும் குரலும் நடுநடுங்க ராவணன் முன் வந்து நின்றான். நடுக்கம் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்க கூடியவன் இப்படி நடுங்கி போய் வந்திருப்பதை பார்த்து இந்த நடுக்கத்திற்கான அர்த்தம் என்ன? என்ன காரணம் என்று அவனிடம் ராவணன் கேட்ட போது, “கரன், தூஷணன், திரிசரஸ் மட்டுமின்றி பதினாங்காயிரம் வீரர்களுமே மாண்டுவிட்டனர். நான் மட்டும் பிழைத்து தப்பித்து வந்தேன்” என்றவனை வியப்பும் சிரிப்பும் மாறாமல் பார்த்த ராவணன்

“நீ மட்டும் எப்படி தப்பித்தாய்?” என்று கேட்க, அதற்கு அந்த அகம்பனனோ,
“எனக்கு இருந்த சாமர்த்தியம், புத்தி சாதுர்யம் அவர்களுக்கு துளிகூட இல்லை” என்றான்.

“என்ன சாமர்த்தியம்? அப்படி என்ன நீ செய்தாய்?” என்று ராவணன் கேட்ட பொழுது, “அதுவா ராமனிடமிருந்து தப்பிக்க வழி ஒன்றுதான் இருக்கிறது என்று நினைத்து, பெண் உடை அணிந்து கொண்டேன். சீதா தேவியை தவிர மற்றொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார் ராமபிரான் என்பது எனக்கு நன்றாக தெரியும். எனது கணிப்பு சரியாக இருந்தது. எனது அந்த புடைவையை பார்த்ததும் என் பக்கம் திரும்பகூட இல்லை அவர். அதனால் தப்பித்து ஓடி வந்து பிழைத்துக் கொண்டேன். அப்படி நான் புடைவையை உடுத்தி கொள்ளவில்லை என்றால், ராமபிரானிடமிருந்து தப்பித்திருக்க முடியுமா என்ன?” என்ற அகம்பன் ராவணனிடம் ராமரின் பெருமையை அல்லவா பறைச்சாற்றி இருக்கிறான்?

ராம நாமத்தை சொல்லி கொண்டிருந்தாலே போதுமே நம் வாக்கிலும், வாழ்க்கையிலும் இனிமை என்பது தானாக கிடைத்திடுமே. எளிமையின் ஸ்வரூபம் என்பது ராமபிரான் மட்டுமல்ல அவனின் திருநாமமும்தான்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்றிரண்டெழுத்தினால்”

என்றல்லவா கம்பர் கொண்டாடுகிறார் ராம நாமத்தை. ராமபிரானால் போடப்பட்ட பாணம், வாலியின் மார்புக்குள் புகுந்த சமயம். வாலி அந்த பாணத்தை பிடித்து இழுக்கிறான். பாணத்தை
பார்க்கிறான்.

“மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை ராமன் என்னும்
செம்மைச்சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக்கண்டான்”
– என்று ராம நாம வைபவத்தை இப்படியும் கொண்டு வந்திருக்கிறார் கம்பர்.

இந்த பாசுரத்தை பின்னாலிருந்து படிக்கும் போது கண்டான், தெரியக்கண்டான், கண்களில் தெரியக்கண்டான், நாமம் தன்னைக் கண்களில் தெரியக்கண்டான், செம்மைச்சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக்கண்டான், ராமன் என்னும் செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக்கண்டவன் வாலி. சகல பாவங்களையும் போக்கடிக்க வல்ல ராம எனும் திருநாமத்தை கண்ணார கண்டு தன் கண்களிலிருந்து நீரை அந்த நாமத்தின் மீதே தாரை வார்த்து மீண்டும் மீண்டும் அந்த திருநாமத்தையே கண்களால் வணங்கினான் வாலி.நாம் இதுவரை செய்த அத்தனை பாவங்களையும் வெளியேற்றி விடக்கூடிய ராம நாமத்தை தொடர்ந்து சொல்லுவோம். ராமபிரானின் திருவருள் எனும் பெரும் செல்வத்தை சேர்த்து கொள்வோம்.

நளினி சம்பத்குமார்

Related Stories: