மாற்று திட்டங்களை மாநகராட்சி செயல்படுத்த வேண்டும் புத்தன் அணை குடிநீர் திட்டத்தால் விவசாயம் அழிந்து விடும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குற்றச்சாட்டு

நாகர்கோவில், பிப்.19: குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை வாணி, வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, விவசாயிகள் புலவர் செல்லப்பா, பத்மதாஸ், தேவதாஸ், முருகேசபிள்ளை, விஜி, தங்கப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் இரண்டு பிரிவாக நடைபெற்றது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: பத்மதாஸ்: மாங்குழிகுளம் ஆக்ரமிப்புகள்  அகற்ற அளவீடு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆக்ரமிப்புகள் அகற்றப்பட வில்லை. குளத்தில் உள்ள மரங்களை விலை நிர்ணயம் செய்ய பத்மநாபபுரம் ஆர்டிஓ வுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் மரங்கள் முறிக்கப்படாமல் உள்ளது.

கலெக்டர்:  இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி முருகேசபிள்ளை: இரணியல் வள்ளியாற்றுப்பாலம் அருகே ஆக்ரமிப்பு செய்யப்பட்டு அந்த இடத்தில்  வீடு கட்டப்படுகிறது.  இதனை தடுத்து நிறுத்த வேண்டும். கலெக்டர்:  இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். புலவர் செல்லப்பா: மாத்தூர் தொட்டிப் பாலம் பகுதியில் 30 ஏக்கர் நிலம் ஆக்ரமிப்பு அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள 30 வீடுகளையும் அகற்ற வேண்டும்.

கலெக்டர்:  நேரில்  பார்வையிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

புலவர் செல்லப்பா:  வயல்வெளிகள், தோப்புகளில்  உள்ள தென்னை மரங்கள் இடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும்.

மின் துறை அதிகாரி:  இதுதொடர்பாக உரிய கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புலவர் செல்லப்பா: கல்லுக்கூட்டம் பேரூராட்சி, குளச்சல் நகராட்சி சார்பில் மின்வாரியத்திற்கு உரிய கட்டணத்தைச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி மார்ச் 15 வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

வின்ஸ்ஆன்றோ: நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் வினியோகம் செய்வது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கின் நிலை என்னவாக உள்ளது.

அதிகாரி: தமிழக அரசு சார்பில் ஆவணங்களை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் போதியதாக இல்லை என்று கூறுகின்றனர்.

புலவர் செல்லப்பா:  நெய்யாறு இடதுகரை கால்வாயை தூர்வார வேண்டும்.

அதிகாரி:  இது தொடர்பாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விஜி: மாம்பழத்துறையாறு அணை தண்ணீர் பாயும் கால்வாயை தூர்வார வேண்டும். விவசாயிகளால் இதை செய்ய இயலாது என்பதால் அரசுதான் இதனை செய்ய வேண்டும்.

கலெக்டர்: தற்போது சிறப்பு நிதி இல்லை. இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விஜி:  நான்குவழி சாலை திட்டத்தில் மூடப்பட்ட குளங்களுக்கு பதில் பிற குளங்களை ஆழப்படுத்த வேண்டும். புத்தன் அணை திட்டத்தில் தண்ணீர் நாகர்கோவில் மாநகராட்சிக்கு கொண்டுவந்தால் 2 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் விவசாயம் அழிந்துவிடும். எனவே நாகர்கோவில் மாநகர பகுதியிலும், அருகேயும் உள்ள பெரிய குளங்களை நகராட்சி மூலம் தூர்வாரி மாற்று குடிநீர் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.

கலெக்டர்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

வின்ஸ் ஆன்றோ:  குளங்கள் தூர்வாருதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர்: உயர்நீதிமன்ற வழக்கில் குளங்கள் தூர்வாருவதற்கு எதிரான தீர்ப்பு வாசகங்கள் உள்ளன. முழுமையான தீர்ப்பை ஆய்வு செய்து சட்ட ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும்.

மேலும் நெல் அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு மற்றும் அவற்றுக்கு வாடகை உயர்வு பிரச்னை, பட்டா நிலங்களில் நிற்கின்ற தேக்கு மரங்களை முறிக்க வனத்துறை விதிகளை தளர்த்த வேண்டும், கிசான் கார்டுக்கு விவசாய கடன் மானியம் வழங்குவதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்வைத்தனர். வேளாண் உபகரணங்கள் வழங்க வேண்டும் கூட்டத்தில் விவசாயி தங்கப்பன் பேசும்போது, கடந்த காலங்களை போன்று விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மண்வெட்டி, கடப்பாறை போன்ற வேளாண் உபகரணங்களை வழங்க வேண்டும்.

கலெக்டர்: இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

பொன்னுலிங்க ஐயன்: நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

கலெக்டர்: அரசு மட்டத்தில் இது தொடர்பாக முடிவு செய்யப்படும்.

Related Stories: