கொரோனா காலத்தை போன்று போரால் உலக பொருளாதாரம் சரியும்: ஐஎம்எப் இயக்குனர் கணிப்பு

புதுடெல்லி: ஈரான் போர் காரணமாக உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறையும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வரும்நிலையில், சர்வதேச நாணய நிதியமானது 2026ம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதமாகவும், 2027ம் ஆண்டில் 3.2 சதவீதமாகவும் சற்று உயரும் என்று கணித்திருந்தது. ஆனால், கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் ஈரான் மீதான போர்ச் சூழல் இந்த கணிப்பை மாற்றியுள்ளது.

ஈரான் நாட்டின் போர் நடவடிக்கையினால் உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் 13 சதவீதம் குறைந்துள்ளது. எரிவாயு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுவதுடன், விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டு விலைவாசி உயர்ந்து வருகிறது. இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண் இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறுகையில், ‘ஈரான் மீதான மோதல் காரணமாக பணவீக்கம் மேலும் உயரும்.

உலகப் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். அனைத்து வழிகளும் விலை உயர்வு மற்றும் குறைந்த வளர்ச்சிக்கே இட்டுச் செல்கின்றன. ஒருவேளை ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வந்தாலும் கூட, பொருளாதார வளர்ச்சிக் கணிப்பைக் குறைக்கவும், பணவீக்கக் கணிப்பை உயர்த்தவுமே சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான திருத்தப்பட்ட உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையை வரும் 14ம் தேதி சர்வதேச நாணய நிதியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.

Related Stories: