துபாய்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போர் மேற்கு ஆசியா முழுவதும் பரவி 38வது நாளாக நேற்றும் நீடித்தது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் 10 நாள் கெடு விதித்தார். இதற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு ஈரானியர்கள் நரக வாழ்க்கையில் தள்ளப்படுவார்கள் என எச்சரித்தார். டிரம்பின் இந்த கெடு இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் கடைசி வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் ஒப்புக் கொள்ளவில்லை. இப்போரை நிறுத்த இருதரப்பினரிடமும் மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான், எகிப்து, துருக்கி நாடுகள் இணைந்து 45 நாள் தற்காலிக போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கக் கோரும் வரைவு முன்மொழிவை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காப்புக்கு அனுப்பி வைத்தன.
ஆனால் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஈடாக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது என ஈரானின் உயர் அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அமெரிக்கா இதற்கு முன் அளித்த 15 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்றும் அதை ஏற்க முடியாது, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என அந்த அதிகாரி கூறி உள்ளார். அதே சமயம், பாகிஸ்தானின் பரிந்துரை குறித்து தனது முடிவை ஈரான் தயாரித்ததாக ஊடக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க வேண்டும் என தங்கள் மீது அழுத்தம் கொடுப்பதை ஈரான் ஏற்காது என்றும் மிரட்டலால் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது என்றும் தங்கள் தாய்நாட்டை காக்க எந்த அளவுக்கும் போராட தயார் என்றும் ஈரான் அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதற்கு அமெரிக்கா தரப்பில் உடனடியாக எந்த பதிலும் தரப்படவில்லை. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் விதித்த 10 நாள் கெடு முடிந்திருப்பதால் இனி ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்குமா என்ற பீதி எழுந்துள்ளது. அவ்வாறு தாக்குதல் தீவிரமாகும் பட்சத்தில் அண்டை நாடுகளான அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை அழிப்பதாக ஈரான் சவால் விடுத்துள்ளளது. இது உலக அளவில் மிக மோசமான தாக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பொதுமக்களுக்கு சேவை வழங்கும் கட்டமைப்புகளை தாக்குவோம் என்பது கடுமையான போர் குற்றம் என்றும் இதில் அமெரிக்காவுக்கு உதவும் எந்த நாடும் சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் என்றும் ஈரான் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கண்டித்துள்ளார்.
