ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.முத்தரசன் பேசியதாவது: பொதுவாக எந்த ஒரு கூட்டணியும் ஓராண்டுக்கு மேல் நீடிப்பது கடினம். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித தொய்வுமின்றி நீடிக்கிறது. சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி, கூட்டுறவு என அனைத்து தேர்தல்களிலும் இக்கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்வதே முதல்வரின் தனிச்சிறப்பு.
நாட்டிலேயே அதிக வரி செலுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால், ஒன்றிய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை தருவதில்லை. குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு கேட்பதை விட கூடுதலாக நிதி அள்ளித்தரும் ஒன்றிய அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் 3ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு, பல்வேறு நுழைவு தேர்வுகளை கொண்டு வந்து மாணவர்கள் பாதிப்படைய செய்கிறார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், `ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம்’ என்று உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல மதங்கள் உள்ளன. மக்கள் எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதை பாஜக தீர்மானிக்கக் கூடாது. தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜவை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
