விஜய்க்கு அரசியல் தெரியல… பாவம் அவரை விட்ருங்க… அவரது மனதில் பாஜதான் இருக்கு… குஷ்பு லக…லக…

புதுச்சேரியில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு பாஜ மாநில துணை தலைவர் குஷ்பு நேற்று பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் பிரதமரின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் உள்ளன. மேற்கு ஆசியாவில் போர் பிரச்னையில் பிரதமர் மோடி பேசினால்தான் சரியாகும் என உலக தலைவர்கள் கூறுகிறார்கள். இதுபோல் பல விஷயங்கள் இருக்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் என்று தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக பொய் வாக்குறுதி கொடுக்க முடியுமா? எல்லாம் வரும்.

அதற்கான நேரம் காலம் இருக்கிறது. பிரதமரிடம் முதல்வர் மாநில அந்தஸ்து கோரிக்கை வைத்துள்ளது நல்ல விஷயம். அதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஒரு யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கொடுக்க பல விஷயங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் அண்ணாமலை போட்டியிடாதது தலைமை எடுத்த முடிவு. அதை ஏன்? எடுத்தார்கள் என்பது அவர்களுக்குதான் தெரியும். கடந்த தேர்தல் போல், தற்போது தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று நான் நினைத்திருந்தால், புதுச்சேரியில் பிரசாரம் செய்ய வந்திருக்க முடியாது.

என்னுடைய கணவர் மதுரையில் போட்டியிடுகிறார். நான் தமிழகம், கேரளா, புதுவையில் பிரசார பணிகளை மேற்கொண்டு வருகிறேன். புதுச்சேரியில் மது விலக்கு வேண்டும் என்று யாராவது கோரிக்கை வைத்துள்ளார்களா? இது சுற்றுலா தளம். டாஸ்மாக்கை நம்பி மட்டும் புதுச்சேரி கிடையாது. சுற்றுலா, பாதுகாப்பு, முன்னேற்றம், உள்கட்டமைப்பு ஆகியவற்றை நம்பிதான் புதுச்சேரி இருக்கிறது. தமிழகம், புதுவையில் தேஜ கூட்டணியின் வெற்றி நிச்சயம்.

விஜய் அரசியலுக்கு இப்போதுதான் வந்திருக்கிறார். பாவம் அவரை விட்டு விடுங்கள். அரசியல் தெரிந்தவர்களை பற்றி பேசலாம். அவர் நேற்றுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். புதுச்சேரி மணவெளி தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற விஜய், வேட்பாளர் பெயரை சொல்லும்போது, எங்கள் கட்சி வேட்பாளர் செல்வம் பெயரை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். இதன் மூலம் விஜய் மனத்தில் பாஜ இருப்பது உறுதியாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: