காலில் விழுந்து பதவி வாங்கி தமிழ்நாட்டுக்கும், கட்சிக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி: கனிமொழி கடும் தாக்கு

காங்கயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் மு.பெ.சாமிநாதனை ஆதரித்து, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி வெள்ளகோவிலில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டிற்கும் என்டிஏவுக்குமான தேர்தல் இது. தமிழ்நாட்டிற்கும் டெல்லியில் இருக்கக்கூடிய இந்துத்துவ வாதிகளுக்குமான தேர்தல். கீழடியில் இருக்கும் தமிழ் நாகரிகத்திற்கும் நாக்பூரில் இருக்கும் ஆர்எஸ்எஸ் அடிப்படை வாதிகளுக்குமான தேர்தல். எதிர்க்கட்சி வேட்பாளர்களை தேர்தல் முடிந்தால் பார்க்க முடியாது.

ஏனென்றால் அந்த கூட்டணி அப்படிப்பட்ட கூட்டணி. தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கக் கூடிய கூட்டணி. எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டுக்கும், தன்னை வளர்த்த கட்சிக்கும் துரோகம் பண்ணியவர். யாருடைய காலில் விழுந்து பதவி வாங்கினாரோ, அதிமுகவில் அந்த அம்மையாருக்கே இடமில்லை. பாஜ கொண்டு வந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களுக்கு வாய் திறக்கவில்லை. 100 நாட்கள் வேலை திட்டத்தை முடக்கியுள்ளனர். தேர்தல் நேரத்தில் இந்தத் திட்டத்தை ஊத்தி மூடி விட்டு ஏன் எங்களிடம் ஓட்டு கேட்கிறீர்கள் என்று கேளுங்கள்.

அதிமுக அண்ணா திமுகவும் இல்லை, அம்மா திமுகவும் இல்லை, அது அமித்ஷா திமுகவாக மாறி இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 150 நாள் வேலை கொடுப்போம் என்று 100 நாள் வேலையையே காப்பாற்ற குரல் கொடுக்க முடியாமல் இருக்கும் நீங்கள், 150 நாள் வேலை கொடுக்கப் போகிறீர்களா? அவர்களுக்கு தெரியும். அதிமுக தேர்தல் அறிக்கை யாரும் படிக்க மாட்டார்கள் என்று.

2016-ல் செல்போன் கொடுக்கிறேன் என்று சொன்னார்கள் ஒருத்தருக்கும் தரவில்லை. ஆனால், மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னார். அதை நிறைவேற்றியவர் நமது முதலமைச்சர். அதேபோல அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் உரிமை தொகை 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாட்டை காப்பாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினால் மட்டும் தான் முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: