சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் பாஜவின் சித்துவேலை எடுபடாது: திருமாவளவன் ‘நச்’

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று புதுச்சேரியில் விசிக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: தேர்தலுக்கு முன்பு தொகுதி பங்கீடு குறித்து பேச கால அவகாசம் இல்லாததால், 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தோம். காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக 3 தொகுதிகளில் போட்டி இல்லை. உழவர்கரை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம்.

மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பணியாற்றுவோம். தமிழக முதல்வரின் பல்வேறு திட்டங்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக குடும்பத்துக்கு ரூ. 8 ஆயிரம் கூப்பன் வழங்குவதாக அறிவித்துள்ளது வெற்றிக்கு கை கொடுக்கும். தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடம் தருவதில்லை என மக்கள் உறுதியுடன் உள்ளனர். இதை எதிரொலிக்கும் வகையில் புதுச்சேரியிலும் மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

புதுச்சேரி கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. பாஜ தேர்தல் அறிக்கையில் புதுச்சேரியின் லச்சினையை மாற்றப்போவதாக கூறியுள்ளது. இது புதுச்சேரியின் சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் முயற்சியாகும். புதுச்சேரி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதே பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் நடத்தும் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ராசேந்திர அர்லேகர் பங்கேற்றுள்ளார். இது நடத்தை விதிகளுக்கு முரணானது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் கூட்டணி கட்சிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மீது நடவடிக்கை எடுத்து அவர் வகிக்கும் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும். எடப்பாடி பழனிசாமி மறைந்த தலைவர் கலைஞர் குறித்து பேசியது அறம் வாய்ந்த செயல் அல்ல. மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவது அநாகரீகம். பாஜவின் சித்துவேலைகள் தமிழகம், புதுச்சேரி தேர்தலில் எடுபடாது. தமிழகம், புதுச்சேரியில் மதச்சார்பு அரசியலுக்கு இடமில்லை. இதை வரும் தேர்தலில் மக்கள் உறுதிபடுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: