குன்றத்தூர், ஏப்.6: ஆன் லைனில் மாஞ்சா நூல் வாங்கி காற்றாடி பறக்க விட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்க விடுவதால் விபத்து மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்க விடுபவர்களை போலீசார் கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வானகரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி வானகரம், ஓடமா நகர், கன்னியம்மன் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில், தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டுக் கொண்டிருந்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (23), காமேஷ் (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வானகரம் போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1 காற்றாடி, மாஞ்சா நூலுடன் கூடிய ஒரு லொட்டாய் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இருவரும் ஆன்லைன் மூலம் மாஞ்சா நூல்களை வாங்கி காற்றாடி பறக்க விட்டது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
