நெல்லை: சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6ம் வகுப்பிலிருந்து மும்மொழி கொள்கை கட்டாயம் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்துக்குள் இந்தியை திணிக்க முயல்கின்றனர். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என கூறி வாக்கு கேட்க முடியுமா என்று மோடி, அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்து உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2ம் கட்ட தேர்தல் பரப்புரையை நெல்லையில் நேற்று முன்தினம் தொடங்கினார்.
நேற்று காலை நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு வாசுதேவநல்லூர் தொகுதி திமுக வேட்பாளரும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜா எம்எல்ஏ, ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன், தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் கலைகதிரவன், கடையநல்லூர் மதிமுக வேட்பாளர் தி.மு.ராஜேந்திரன், சங்கரன்கோவில் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சங்கை கணேசன் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6ம் வகுப்பிலிருந்து மும்மொழி கொள்கை கட்டாயம் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (நேற்று) அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்துக்குள் இந்தியை திணிக்க முயல்கின்றனர். தமிழ்நாட்டில் கல்வித்தரம் உயர்வதை நாம் தடுக்கிறோம் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதையே சாக்காக வைத்து தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதியை விடுவிக்காமல் இருப்பவர் தான் இந்த தர்மேந்திர பிரதான். இப்போது இந்தியை திணிக்க முயல்கிறார்.
தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வரும் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவோம் என்று கூற தைரியம் இருக்கிறதா? என நான் சவால் விடுகிறேன். தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை தான் என பேசும் எடப்படி பழனிசாமி, மும்மொழி கொள்கையை அமல்படுத்துகிறோம் என கூறியதை திரும்ப பெற வைக்க முடியுமா? அந்த கூட்டணியில் தான் இருக்கிறார் இந்த எடப்பாடி பழனிசாமி. சிபிஎஸ்இ பள்ளிகளை அனுமதிக்காமல் தமிழ்நாடு அரசு தடுக்கிறது என பிரதமர் மோடி கூறுகிறார்.
இப்படி சொல்வதால் தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள். தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற பாஜ வேஷம் போடுகிறது. இதை அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாட்டில் பாஜவை வேரோடும் மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என்பதற்காக தான் உங்களை தேடிவந்துள்ளோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவு: ‘கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துகள் மிகவும் பொறுப்பற்றவை மற்றும் அசட்டுத்தனமானவை.
மேலும், அவை இந்தியாவின் பன்மைத்துவம், கூட்டாட்சி விழுமியங்கள் மற்றும் மாநிலங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் மீது உங்களுக்குள்ள ஆழமான அலட்சியத்தைப் பிரதிபலிக்கின்றன. தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை உறுதியாக நிராகரிக்கிறது. இது மொழிகளை எதிர்ப்பது பற்றியது அல்ல, மாறாக திணிப்பை எதிர்ப்பது மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பது பற்றியது. நாடாளுமன்றத்தில் தமிழர்களைப் பற்றி நீங்கள் முன்பு தெரிவித்த இழிவான கருத்துகளும், அதைத் தொடர்ந்து தாமதமாக நீங்கள் தெரிவித்த மன்னிப்பும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நடத்தை முறையை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்தி திணிப்பை ஏற்க மறுத்ததற்காக தமிழ்நாட்டைத் தண்டிக்கும் விதமாக, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடி என்ற மாபெரும் தொகையைச் சட்டவிரோதமாக நிறுத்தி வைப்பது திமிர் பிடித்த செயல் என்பதைத் தவிர வேறில்லை. நெகிழ்வுத்தன்மை என்ற போர்வையிலோ, நிதி அழுத்தத்தின் பின்னாலோ அல்லது தேசிய நலன் என்று காட்டப்பட்டோ, எந்தச் சூழ்நிலையிலும் மொழித் திணிப்பைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. இந்த கொள்கை மாணவர்கள் மீது தேவையற்ற சுமையைச் சுமத்துகிறது,
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளையும், வட இந்தியாவில் பெங்காலி, ஒடியா, மராத்தி போன்ற மொழிகளையும் எத்தனை பிஎம் ஸ்ரீ பள்ளிகள் உண்மையாகவே வழங்குகின்றன? கேந்திரிய வித்யாலய ‘சங்கதன்’ கீழ் உள்ள எத்தனை பள்ளிகள் உண்மையில் தமிழ் கற்பிக்கின்றன? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்? இந்தி திணிப்புக்கு எதிரான எங்கள் எதிர்ப்பு அச்சத்தின் காரணமாகப் பிறந்ததல்ல. நமது தாய்நாடான தமிழ் ஒருபோதும் பலவீனமடையாது.
தமிழும் தமிழர்களும் ஒவ்வொரு விதமான திணிப்பு அல்லது கலாச்சார ஊடுருவலையும் தாங்கி நின்றிருக்கிறார்கள், தொடர்ந்து எதிர்த்து நிற்பார்கள். இது கொள்கை, கண்ணியம் மற்றும் இந்தியாவின் உண்மையான பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது தொடர்பான ஒரு விஷயமாகும். சமூக ஒருமித்த கருத்து மற்றும் வலுவான கல்வி விளைவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, நிரூபிக்கப்பட்ட தனது இருமொழிக் கொள்கையை, பன்முகத்தன்மையைக் குறைத்து, மாணவர்களுக்குச் சுமையை ஏற்படுத்தி, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தும் ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்காக தமிழ்நாடு கைவிடாது.
தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை உலக அரங்கில் ஒரு வெற்றிக் கதையாகத் திகழ்கிறது; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழர்கள் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும், அனைவரையும் உள்ளடக்கும் தன்மையும் இந்த மாதிரியில் ஆழமாக வேரூன்றியுள்ளன. எங்களின் அனைத்துக் கூற்றுகளையும் அனுபவப்பூர்வமான தரவுகளின் மூலம் எங்களால் நிரூபிக்க முடியும். மேலும் உங்கள் வாதங்கள் முற்றிலும் சொல்லாட்சிக் கலையாகவும், கல்வித் துறையில் எந்தவொரு உண்மையான தரவுகளும் அற்றவையாகவும் உள்ளன.
நவீனக் கல்வியில் தமிழ்நாட்டின் பள்ளிகள் பின்தங்கியுள்ளன என்று கூறுவது தவறானது மற்றும் அலட்சியமானது. மாணவர் சேர்க்கை, கற்றல் விளைவுகள் மற்றும் புதுமைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாடு அரசு உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதுடன், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடையும் இலவச காலை உணவுத் திட்டம் போன்ற முன்னோடித் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
2026 திமுக தேர்தல் அறிக்கையில் காலை உணவுத் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை நீட்டித்து, கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயனடைவதாக உறுதியளிக்கிறது. பொதுக் கல்வி என்பது எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும்; அது ஒரு செலவினமாகக் கருதப்படாமல், நீண்டகால சமூகப் பலன்களை உருவாக்கும் ஒரு சமூக முதலீடாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைக் கோரும் அதே வேளையில், ஒவ்வொரு இந்திய குழந்தையும் தமிழ்நாட்டின் மண்ணில் மூன்று மொழிகளைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்ற இந்த பிரகடனத்தை வெளியிடுமாறு நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் அவரது தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாகக் கூற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். பாஜவால் தீவிரமாக முன்னெடுக்கப்படும் இந்த மும்மொழிக் கொள்கையை அவர்கள் ஆதரிக்கிறார்களா? பழனிசாமி, தாம் தமிழக மக்களின் பக்கம் நிற்கிறாரா அல்லது கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்க முயலும் தனது டெல்லி மேலதிகாரிகளின் பக்கம் நிற்கிறாரா என்பதை சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவுபடுத்த வேண்டிய தருணம் இது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* இந்தி திணிப்பை ஏற்க மறுத்ததற்காக தமிழ்நாட்டைத் தண்டிக்கும் விதமாக, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடி என்ற மாபெரும் தொகையைச் சட்டவிரோதமாக நிறுத்தி வைப்பது திமிர் பிடித்த செயல் என்பதைத் தவிர வேறில்லை.
* சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6ம் வகுப்பிலிருந்து மும்மொழி கொள்கை கட்டாயம் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்துக்குள் இந்தியை திணிக்க முயல்கின்றனர்.
* தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற பாஜ வேஷம் போடுகிறது. இதை அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாட்டில் பாஜவை வேரோடும் மண்ணோடும் வீழ்த்த வேண்டும்
* மோடிஜி வேர்இஸ் எல்பிஜி?
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘பணமதிப்பிழப்பை கொண்டு வந்து அனைவரையும் வங்கி வாசல்களிலும் ஏடிஎம் வாசல்களிலும் கால்கடுக்க நிற்க வைத்தவர், கொரோனா காலத்தில் மக்கள் உயிர்காக்க ஆக்சிஸன் சிலிண்டர்களை தேடி அலைந்தனர். தற்போது சமையல் காஸ் சிலிண்டர்களுக்காக மக்களை தவிக்க வைத்துள்ளார் பிரதமர் மோடி.
மோடி ஜி மோடி ஜி வேரிஸ் எல்பிஜி என தமிழ்நாட்டு மக்கள் கேட்கின்றனர். எனினும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையையும், சிலிண்டர் விலையையும் உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் ஓட்டல்களை மூடி விட்டு வாழ்வாதாரங்களை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப்போகிறார்’’ என்றார்.
