சுங்கச்சாவடிகளில் நடக்கும் தகராறுகளுக்கு முற்றுப்புள்ளி; விஐபி, அரசு அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்ட ‘பாஸ்டேக்’ கட்டாயம்: வரும் 10ம் தேதி முதல் புதிய நடைமுறை அமல்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் வரும் 10ம் தேதி முதல் ரொக்கப்பணம் பெறுவது முழுமையாக நிறுத்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு கோரி அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்கள் தங்களது அடையாள அட்டைகளை காண்பிப்பது வழக்கமாக இருந்தது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும், மோதல்களும் ஏற்பட்டு வந்தன. மேலும், முறையான மின்னணு அட்டை இல்லாத வாகனங்களால் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசை ஏற்பட்டு, பயணிகளுக்கு பெரும் எரிச்சலை உண்டாக்கி வந்தது.

இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, வரும் 10ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த ரொக்கப்பணம் அனுமதிக்கப்படாது. கட்டண விலக்கு பிரிவில் வருபவர்கள் ‘விலக்கு அளிக்கப்பட்ட பாஸ்டேக்’ அட்டையை பெற வேண்டும் அல்லது ஆண்டு சந்தா அட்டையை வாங்க வேண்டும் என்று அரசு அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கார்களுக்கான ஆண்டு சந்தா கட்டணம் 3,075 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 200 முறை சுங்கச்சாவடிகளை கடக்க முடியும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சுங்கக்கட்டண விலக்கு என்பது குறிப்பிட்ட பதவி அல்லது அலுவலகம் சார்ந்தது, தனிநபர் சார்ந்தது அல்ல. ஆனால் பலர் தங்களது சொந்த வாகனங்களில் செல்லும் போது கூட அடையாள அட்டையை காட்டி கட்டணம் செலுத்த மறுக்கின்றனர். இது தேவையற்ற வாக்குவாதங்களை உருவாக்குகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவில் சிக்னல் இல்லாத தடையற்ற சுங்க வசூலை அறிமுகப்படுத்த உள்ளதால், பொதுமக்கள் இந்த புதிய மாற்றத்திற்கு விரைவாக மாற வேண்டும். புதிய விதிகளின்படி, வாகனத்தில் சரியான பாஸ்டேக் அட்டை இல்லையென்றால், யூபிஐ மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.

அவ்வாறு செலுத்தும்போது சாதாரண கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஒருவேளை யூபிஐ மூலமும் பணம் செலுத்த மறுத்தால், தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி அந்த வாகனம் சாலைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் அல்லது அங்கிருந்து அகற்றப்படும். மேலும், செலுத்தப்படாத கட்டணத்திற்காக மின்னணு நோட்டீஸ் அனுப்பப்படும். அதனை 3 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: