காங்கிரசுக்கு தாவிய 2 நாட்களுக்கு பின் ஜி.கே.மணி மகனை கட்சியிலிருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவு

திண்டிவனம், மார்ச் 31: பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலால் அக்கட்சி பிளவுபட்ட நிலையில் இத்தேர்தலை சந்திக்கிறது. கட்சிக்கொடி, சின்னம் அன்புமணி வசம் இருந்தாலும் பெரும்பாலான பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் ராமதாசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கின்றனர். சசிகலாவின் அஇபுமமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப்போவதாக பாமக நிறுவனர் அறிவித்திருந்தார். இதில் சேலம் தெற்கு எம்எல்ஏ அருளுக்கு விருப்பமில்லை எனவும் தகவல் வெளியாகின. தற்போது வரையிலும் அவர் தைலாபுரம் தோட்டத்துக்கு வராமல் உள்ளார். ஆனால் கவுரவ தலைவரான ஜி.கே.மணி, ராமதாஸ்- சசிகலா சந்திப்பின்போது உடனிருந்ததோடு சென்னை சென்று சசிகலாவை செயல் தலைவர் காந்தியுடன் சந்தித்து பேசினார்.

இதற்கிடையே ஜிகே மணியின் மகனும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான தமிழ்குமரன் திடீரென டெல்லி சென்று காங்கிரசில் இணைந்தார். அவருக்கு ஜி.கே.மணி கடந்த தேர்தலில் வென்ற பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் சார்பில் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. தமிழ்குமரனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, தனது மகனைகூட கட்சியிலிருந்து வெளியேற்றிய ராமதாஸ், சமீபத்தில்தான் அவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியை கொடுத்தார்.

அதன்பிறகு திமுகவுடன் தேர்தல் கூட்டணியை ஜி.கே.மணி விரும்பிய நிலையில், அதுவும் நிராசையானது. இவ்விவகாரத்தில் ராமதாஸ், யாரும் எதிர்பாராத மாற்று முடிவை கையில் எடுக்க காங்கிரசுக்கு தமிழ்குமரன் தாவியிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் தமிழ்குமரனை கட்சியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் நேற்று அறிவித்துள்ளார். அதில், ‘‘எந்தவித கட்சிப் பணியும் செய்யாமலும், அவருக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் ஆர்வம் காட்டாமல், ஈடுபடாமல் இருந்துவந்த காரணத்தாலும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாலும், அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாகவும், தொண்டர்கள் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் முகுந்தன்?
கவுரவ தலைவர் ஜி.கே.மணியின் மகன், காங்கிரசில் இணைந்தது ராமதாசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞர் சங்கத் தலைவர் பதவி, யாருக்காக மேடையில் அன்புமணியுடன் ராமதாஸ் நேரடியாக மோதினாரோ? அவருக்கே (முகுந்தனுக்கு) மீண்டும் வழங்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

Related Stories: