மீண்டும் ஒரு கரூர் துயரத்துக்கு ஒத்திகை புதுச்சேரியில் 4 குறுகிய சாலைகளில் பிரசாரத்துக்கு அனுமதி கேட்கும் விஜய்

 

தமிழகம், புதுச்சோியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். முதல்கட்டமாக ஏப்.9ம்தேதி வாக்குபதிவு நடைபெறும் மாநிலமான புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வருகிற 5ம்தேதி (ஞாயிறு) தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். தவெக 28, நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் 30 பேரையும் ஆதரித்து வாக்கு சேகரிக்க அனுமதி கேட்டு சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்பி கலைவாணனிடம், அக்கட்சியின் தேர்தல் இணை கண்காணிப்பாளர் புதியவன் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ஏப்.5ம்தேதி காலை 9.30 மணிக்கு காலாப்பட்டு நுழைவு வாயிலுக்கு வரும் விஜய், அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு 10 மணிக்கு முத்தியால்பேட்டை சின்னமணிக்கூண்டு பகுதியில் வாக்கு சேகரிக்கவும், தொடர்ந்து 10.30க்கு அஜந்தா சந்திப்பு, 11 மணிக்கு சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் சந்திப்பில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கரூரில் 41 உயிர்கள் பலியான சம்பவத்திற்குபின் மேற்கண்ட இடங்களில்தான், 2 மாதங்களுக்கு முன்பு ரோடுஷோ நடத்த விஜய் அனுமதி கேட்டிருந்தார். முதல்வர் ரங்கசாமி மூலமாக பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டும் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. உப்பளம் ஹெலிபேட் மைதானத்தில் 50 நிபந்தனைகளுடன் திறந்தவெளி கூட்டத்துக்கே அனுமதி வழங்கப்பட்டன. தற்போது தேர்தல் பிரசாரம் எனும் பெயரில் புதுச்சேரியில் மீண்டும் மிககுறுகிய சாலையில் அதுவும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும் ஞாயிற்றுக்கிழமை தவெக அனுமதி கோரியுள்ள நிலையில், அதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு என்றே அரசு மற்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்துடன் புதுச்சேரி பின்னிப் பிணைந்துள்ளதால், நடிகர் விஜய்யை பார்க்க வேண்டுமென்ற முனைப்பில் இருமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஒரேநேரத்தில் 4 இடங்களிலுள்ள குறுகிய சாலைகளில் திரளும்பட்சத்தில் மீண்டும் ஒரு கரூர் சம்பவம், புதுச்சேரியில் அரங்கேற வாய்ப்புள்ளதால் பொதுமக்களின் உயிர்பாதுகாப்பை கருத்தில் கொண்டு விஜய்யின், தெருமுனை பிரசாரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என அரசியல் கட்சிகள், தன்னார்வ பொதுநல அமைப்புகள் கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 

Related Stories: