*வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்
முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் கோரையாறு கதவணை சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிக்கு வரும் கோரையாறு, இப்பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாகவும், பாசணத்தை பெற்றுதரும் முக்கிய ஆறாகவும் உள்ளது.
திருவாரூர் தொடங்கி திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், பல பகுதியில் கிளைகளாக பிரிந்து அப்பகுதி விவசாயிகளுக்கு பாசன ஆதாரமாக உள்ளது.
இந்த நிலையில் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் உள்ள கோரையாற்றில் அமைந்துள்ள (சட்ரஸ்) கதவணை தண்ணீர் தேக்கம் மூலம் ஆலங்காடு, கரைதிடல், உப்பூர், கோபாலசமுத்திரம், வீரன்வயல், கழுவங்காடு போன்ற பகுதி விவசாயத்திற்கும், அதேபோல் தடுப்பனை அருகே பிரிந்து செல்லும் பாசன வாய்க்கால் மூலம் ஜாம்புவான்னோடை பகுதி விவசாயத்திற்கும் மற்றும் அப்பகுதி பல்வேறு வகையில் நீர் ஆதாரத்தையும் பெற்று தருகிறது.
மிகவும் பழமையான இந்த கதவணை முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. அதேபோல் கதவணை கதவுகளை திறக்க செல்லும் மேல் பகுதியில் நடைபாதையில் சிலாப் பொழிவு இழந்து சேதமாகி இருந்தது. மேலும் பல பகுதி உடைந்து விழுந்து இருந்தது.
சென்ற 2009ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது கதவணையில் தெற்கு பகுதியில் ஒருபகுதி உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் தடுப்பனையின் மேல்பகுதி நடைபாதையில் அன்று முதல் இன்று வரை புதிய பேருந்து நிலையம் பகுதியிலிருந்தும், அதேபோல் ஜாம்புவானோடை மற்றும் தர்கா பகுதியிலிருந்தும் மக்கள் குறுக்கே செல்வதற்காக நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
கஜா புயலின் வேகத்திற்கு இந்த கதவணை (சட்ரஸ்) திருகு, ஹெட், ஷட்டர் ராடு இணைப்பிலிருந்த சிமெண்ட் இணைப்பு நடைபதை சிலாப் கைபிடி சுவர் ஆகியவை இடிந்து விழுந்தது. அதன் இணைப்பிலிருந்த கான்கிரீட்டும் இணைப்புகளும் உதிர்ந்து விழுந்தன. இதனால் ஷட்டர் ராடை சுழற்றி இயக்க வழியில்லை என்பதோடு ஷட்டரை மேலே ஏற்றி இறக்கவும் சிரமம் ஏற்பட்டது.
அதனால் இனியும் காலதாமதம் படுத்தாமல் போர்க்கால அடிப்படையில் இந்த தடுப்பணையை இடித்துவிட்டு புதியதாக கட்ட முன்வர வேண்டும் அல்லது முழுமையாக சீரமைக்க முன்வர வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளும் இப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த கதவணையை பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இந்த கதவணையின் தற்போதைய நிலவரத்தை நேரில் அறிந்த அதிகாரிகள் உடனடியாக முழுமையான மேல் பகுதியை சீரமைக்க சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மேல்தளம் கான்கிரீட்டுகள் இடித்து அகற்றப்பட்டு இரும்புகளாலானா தூண்கள் மூலம் அமைக்கும் பணிகளும் அதேபோல் இரும்புகள்லா னா தூண்கள் கைபிடி உள்ளிட்ட பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
