கோவையில் பரபரப்பு ஓடும் பஸ்சில் இருந்து வெளியே தவறி விழுந்து மூதாட்டி பலி

*சிசிடிவி காட்சி வைரல்

கோவை : ஓடும் பஸ்சில் இருந்து வெளியே தவறி விழுந்து மூதாட்டி பலியான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கோவைப்புதூரை சேர்ந்தவர் காமாட்சி (62). இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து கோவைப்புதூருக்கு தனியார் பஸ்சில் சென்றார். பஸ் கோவைப்புதூர் நிறுத்தம் அருகே வந்த போது காமாட்சி இறங்குவதற்காக பின் இருக்கையில் இருந்து எழுந்து முன் படிக்கட்டு அருகே வந்தார்.

அப்போது பஸ் வேகமாக வந்து கொண்டு இருந்தது. அருகில் இருந்த கம்பியை பிடிக்க முயன்றபோது பஸ் குலுங்கியது. இதில் பிடித்தம் இல்லாமல் காமாட்சி தடுமாறி பஸ்சில் இருந்து வெளியே தவறி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினர்.

பின்னர் சாலையில் பலத்த காயங்களுடன் கிடந்த காமாட்சியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மருத்துவமனைக்கு வந்து காமாட்சி உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே காமாட்சி ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழும் காட்சி அந்த பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: