*டீலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
கோவை : கோவையில் 432 சிலிண்டர் பதுக்கி வைத்த ஏஜென்சி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். டீலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவின் பேரில் பேரில் கோவை சரக டிஎஸ்பி மரியமுத்து, கோவை அலகு (பொ) இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மேலாளர்கள் ஏஜென்சிகளில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி கோவை லெட்சுமி மில் சிக்னல் அருகே கடந்த 14ம் தேதி சோதனை நடத்தி பதுக்கி வைத்திருந்த 1000 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பாப்பநாயக்கன்பாளையம், பழையூரை சேர்ந்த நைனா கார்த்திகேயன் (33) என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ரத்தினபுரி செல்லப்ப கவுண்டர் லே அவுட் பகுதியில் ஒரு குடோனில் வணிக சிலிண்டர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் ரத்தினபுரியை சேர்ந்த ஏஜென்சி உரிமையாளர் சதீஷ்குமார் (33) என்பவர், 432 சிலிண்டர்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர், பதுக்கி வைத்திருந்த 432 சிலிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சிலிண்டர்கள் பதுக்கிய வழக்கில் தமிழ்நாட்டில் முதன் முறையாக மதுரை மாவட்டத்தில் பழனி மற்றும் மதன்குமார் ஆகிய 2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து 2வது முறையாக கார்த்திகேயன் மீது குண்டர் சட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் சிலிண்டர்கள் விற்பனை செய்யக்கூடிய ஏஜென்சிகள், டீலர்கள் மற்றும் சப் டீலர்கள் அலுவலகங்களில் உள்ள சிலிண்டர்கள் கையிருப்பு விவரங்கள் மற்றும் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்ட விவரங்கள் முறையாக பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அந்த பதிவேடுகள் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் மூலமாக தணிக்கை செய்யப்படும். அப்போது ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட சிலிண்டர் விற்பனை செய்யக்கூடிய ஏஜென்சிகள் மற்றும் டீலர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு போலீசார் கூறினர்.
