ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 5 ஆயிரம் ஹெக்டேர் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக விலை நிலையாக நீடிப்பதால், நடப்பாண்டில் சுமார் 5000 ஹெக்டேர் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.தமிழ்நாட்டில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது.

இதில் 30 சதவீதத்துக்கும் மேல் ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 7 லட்சம் மூட்டைகள் வரை மஞ்சள் உற்பத்தியாகும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் மூட்டைகள் உற்பத்தியாகின்றன. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத், மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி, தமிழகத்தில் ஈரோடு என இந்தியாவில் 3 இடங்களில் தான் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தை உள்ளது.

புவிசார் குறியீடு பெற்றுள்ள ஈரோடு மஞ்சளில், 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை குர்குமின் அளவு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 2015ல் 8,912 ஹெக்டேராக இருந்த மஞ்சள் சாகுபடி, 2016-ல் 2,966 ஹெக்டேராக குறைந்தது.

இதன் பின்னர் 2017ல் 8,988 ஹெக்டேராக அதிகரித்த மஞ்சள் சாகுபடி, 2018ல் 5,625 ஹெக்டேராகவும், 2019ல் 4,319 ஹெக்டேராகவும், 2020, 2021, 2022 வரை சுமார் 3,500 முதல் 4,000 ஹெக்டேர் வரையும் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், 2023ல் 2,000 ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி குறைந்தது. மஞ்சள் விலை வீழ்ச்சியே மஞ்சள் சாகுபடி குறைவுக்கு காரணமாக உள்ளது.

தொடர்ந்து 12 ஆண்டுகளாக மஞ்சள் சராசரியாக குவிண்டால் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை விலை போனது. இதனால், விவசாயிகள் சாகுபடி செய்த செலவை திரும்ப எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், மஞ்சள் சாகுபடியும் 25 சதவீதம் அளவுக்கு குறைந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மஞ்சள் குவிண்டால் ரூ.24,000 வரை விற்பனையானது.

பிறகு படிப்படியாக குறைந்து ரூ.12,000 முதல் ரூ.13,000 வரை விற்பனையானது. மஞ்சள் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ.10,000க்கும் குறையாமல் உள்ளதால் மஞ்சள் நடவில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக விற்பனையானால் விவசாயிக்கு நஷ்டம் ஏற்படும். கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு 2023 ஜூலை மாதத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் விற்றது. 2024-ல் ரூ.21,000 வரை விற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சராசரியாக குவிண்டால் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது.

மஞ்சள் விலை நிலையாக நீடிப்பதால் விவசாயிகள் மஞ்சள் சாகுபடிக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த ஆண்டில் 4,000 ஹெக்டேர் அளவுக்கு இருந்த மஞ்சள் சாகுபடி பரப்பு, நடப்பாண்டில் 5,000 ஹெக்டேர் அளவுக்கு அதிகரித்துள்ளது. கொடுமுடி, மொடக்குறிச்சி, அந்தியூர், பவானி, கோபி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த நல்ல மழை, பவானிசாகர் அணை நிரம்பி தொடர்ந்து 4 ஆண்டுகளாக அணையில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதும் மஞ்சள் சாகுபடிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: