தமிழகத்தில் பழங்குடியினருக்கான தனித்தொகுதிகளாக சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி. இந்த தொகுதியை பொறுத்தவரை, சேலம் (ஒரு பகுதி), ஏற்காடு, ஆத்தூர் மற்றும் வாழப்பாடி வட்டாரங்களை சேர்ந்த கிராமங்கள் அடங்குகின்றன. இதில் ஏற்காடு வட்டாரத்தில் உள்ள மலைக்கிராமங்களில் முழுமையாக பழங்குடியினரும், சேலம் மற்றும் வாழப்பாடி வட்டாரங்களில் பிற சமூகத்தினரும் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
இதன் காரணமாக, ஏற்காடு பழங்குடியினருக்கான தனித்தொகுதியாக இருந்தாலும், பிற சமூகத்தினரின் வாக்குகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாக உள்ளது. இத்தொகுதியின் மலைப்பிரதேச பகுதிகளில் காபி தோட்ட தொழிலாளர்களும், மற்ற இடங்களில் விவசாயிகளும் அதிகளவில் வசிக்கின்றனர். கடந்த 1957 முதல், ஏற்காடு தொகுதிக்கு தேர்தல் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ், திமுக, அதிமுக என 3 கட்சிகளும் மாறி, மாறி வெற்றி பெற்று தங்களது இருப்பை நிரூபித்துள்ளன.
தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக சார்பில், உஷாராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெண் வேட்பாளராக ரேவதி மாதேஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி துணை அமைப்பாளராக உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு திமுக சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதால், ஏற்காடு தொகுதியைச் சேர்ந்த பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
