- காங்கிரஸ்
- பண்ணா
- ஜாலி
- துபாய்
- முஸ்லீம் லீக்
- எதிராக
- மகிழ்ச்சி
- தவனூர்
- மலப்புரம் மாவட்டம்
- காங்கிரஸ் கூட்டணி
மலப்புரம் மாவட்டம் தவனூர் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.எஸ் ஜோய் போட்டியிடுகிறார். இவர் மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆவார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தவனூர் தொகுதி காங்கிரஸ் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் பாவா ஹாஜி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜோய்யை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற வைக்க வேண்டும். இதற்காக எல்லா தேர்தல் கமிட்டிகளும் அயராது பாடுபட வேண்டும். ஜோய்யை வெற்றி பெற வைக்கும் கமிட்டிக்கு ஒரு ஆச்சரியப்பட வைக்கும் பரிசை அறிவிக்க தீர்மானித்துள்ளேன். இதன்படி ஜோய்க்கு அதிக வாக்குகள் பெற்றுத் தரும் கமிட்டியை சேர்ந்தவர்களுக்கு 2 வாரம் துபாய், குவைத் உள்பட வளைகுடா நாடுகளுக்கு இலவசமாக டூர் சென்று வர ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதுகுறித்து இடதுசாரி கூட்டணி சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது. புகார் குறித்து விசாரணை நடத்திய மாவட்ட தேர்தல் அதிகாரி, பாவா ஹாஜி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதன்படி அவர் மீது தவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
