சென்னை: பெயரளவில் மட்டும் கிறிஸ்தவராக உள்ள விஜய்க்கு எப்படி சிறுபான்மை மக்கள் ஆதரவு தருவார்கள். மதத்தினால் பிரிவினை ஏற்படுத்தாத, மதச்சார்பற்ற கட்சிகளுக்கு தான் சிறுபான்மையினர் ஆதரவு கொடுப்பார்கள் என எம்கே.நகர் புனித ஜோசப் ஆலய அருட்தந்தை சார்லஸ் கூறினார். 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தலில் தங்கள் ஆதரவு குறித்தும் தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்தும், சென்னை வியாசர்பாடி புனித ஜோசப் ஆலயத்தின் அருட்தந்தை சார்லஸ் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணிகள் முடிவு செய்யப்பட்டு யார் யாருக்கு எந்தெந்த இடங்கள் என்பது தெளிவாகி இருக்கிறது. இந்த தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் வேட்பாளராக நிற்கிறார். விஜய் கிறிஸ்தவர் என்பதால் உங்கள் ஆதரவு, சிறுபான்மையினர் ஓட்டுகள் விஜய்க்கு செல்லுமா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். பெரம்பூரில் விஜய் நின்றாலும் அவருக்கு ஓட்டு போடுவார்களா என்று தெரியாது.
ஆனால் விஜய் பெயரளவில் மட்டும் கிறிஸ்தவனாக இருந்தால் மட்டும் போதாது. அவருடைய வாழ்வியல் மற்றும் செயல்பாடுகளிலும் கிறிஸ்தவராக இருக்க வேண்டும். மதத்தினால் பிரிவினை ஏற்படுத்தாத, மதச்சார்பற்ற கட்சிகளுக்கு தான் சிறுபான்மையினர் ஆதரவு கொடுப்பார்கள். விஜய் இதுவரை அரசியல் சார்ந்த எந்த விஷயங்களிலும், அரசியல் போராட்டங்களிலும் ஈடுபடாதவர்.
சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர். அவர்கள் எப்படி தமிழ் மக்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்? மத்தியில் இருக்கும் பாஜ, தமிழ்நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் துரோகம் செய்து கொண்டே இருக்கிறது. சமஸ்கிருதத்திற்கு ஆயிரம் கோடிகளை கொட்டி கொடுப்பவர்கள், ஆதி காலத்திலிருந்து கலாச்சாரத்திற்கு வித்திட்ட தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் அவர்கள் கொடுக்க தயங்குகிறார்கள்? அவர்களை தமிழ்நாட்டில் எப்படி தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள்.
அவர்களுடன் இருப்பவர்களும் அவர்களுக்கு அடிமையாக இருப்பவர்களும் தமிழ்மக்களிடம் ஆதரவு கேட்பது நியாயமற்ற ஒன்று. விஜய் பெரம்பூரை தேர்வு செய்ய காரணம், சிறுபான்மையினர் ஓட்டுகளை நம்பி தான். கிறிஸ்தவர்கள் மதத்தை பார்த்து மட்டும் ஓட்டு போட மாட்டார்கள். பெரும்பாலும் படித்தவர்கள். பகுத்தறிந்து தான் அவர்கள் ஓட்டுகளை போடுவார்கள். மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளரை போல விஜய் களத்திற்கு வந்து பிரசாரம் செய்வாரா என்றும் தெரியவில்லை.
அரசியல்வாதியாக இன்னும் விஜய் மாறவில்லை. சினிமா உலகத்தில் அரசியல் செய்ய நினைக்கிறார். திருச்சி கிழக்கிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அங்கு இனிகோ இருதயராஜ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரும் போட்டியிடுகிறார். யாருக்கு வெற்றி என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். இந்த தேர்தலில் எங்கள் ஆதரவு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான்.
இந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செய்து இருக்கிறார். நிச்சயமாக தமிழ் மக்கள் அவருக்கு தான் ஆதரவை கொடுப்பார்கள். நான் இதுவரை மதச்சார்பற்ற கட்சிகளுக்கு தான் ஆதரவை தெரிவித்தேன், விஜய் பெயரளவில் மட்டும் தான் ஜோசப் விஜய் என்று சொல்கிறாரே தவிர, உண்மையான செயலளவில் கிறிஸ்தவராக இல்லை. விஜய் பாஜவுடன் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இருப்பதாக அண்மையில் வந்த செய்திகளும் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
