×

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் பிரசாரம்: திருவாரூரில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்

சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் பிரசாரம் செய்கிறார். கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் இருந்து மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக நாளை(31ம் தேதி) முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

முதற்கட்ட பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் நாளை கலைஞர் ஊரான திருவாரூரில் இருந்து தொடங்குகிறார். அன்றைய தினம் மாலை 5 மணியளவில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூர் தெற்கு ரத வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

1ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், மணப்பாறை, முறிசி, துறையூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி உழவர் சந்தையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அன்று மாலை அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபரம், குளித்தலை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கரூர் ராயனூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

2ம் தேதி காலை 9 மணிக்கு பவானிசாகர், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர். கோபிசெட்டிபாளையம். ஈரோடு கிழக்கு, பவானி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு சித்தோடில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், அன்று மாலை 5 மணிக்கு சூலூர், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதி வேட்பாளரை ஆதரித்து கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இத்தகவலை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK ,Tiruvarur ,Chennai ,Kalaignar ,
× RELATED திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ்...