×

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 17வது சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனுக்கள் மீது பரிசீலனை மே 7ம் தேதி நடைபெறும். ஏப்ரல் 9ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆகும். தமிழகத்தில் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டாலும், ஏப்ரல் 2, 4, 6 ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். அரசு விடுமுறை நாட்கள் காரணமாக மார்ச் 31ம் தேதி மற்றும் ஏப்ரல் 1, 3, 5 ஆகிய 4 நாட்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது.

அதன்படி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையான 8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குவதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பு மனு தாக்கலின்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

அலுவலகத்துக்குள் வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மனுவை வேட்பாளர்கள் இணையவழியில் பூர்த்தி செய்யலாம். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கலின்போது நேரில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu… ,
× RELATED திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ்...