மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு இன்று முதல் 6 ஒன்றியங்களில் நடக்கிறது

அரியலூர்,பிப்.17: அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு முகாம், இன்று (17ம் தேதி) முதல் 6 ஒன்றியங்களில் நடக்கிறது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான அலிம்கோ பெங்களூர் வாயிலாகவும் மாவட்ட நிர்வாகம் வாயிலாகவும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்று கோல், முடநீக்கு சாதனங்கள், நடைப்பயிற்சி உபகரணங்கள், செயற்கை கை, கால், மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி உபகரணங்கள், தேவைப்படும் பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது. மேலும், அச்சிறப்பு முகாமின் போது புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படவும் உள்ளது.

எனவே, திருமானூர் வட்டாரத்திற்கு திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (17ம் தேதி) சிறப்பு முகாம் நடக்கிறது. செந்துறை வட்டாரத்திற்கு செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை (18ம் தேதி) சிறப்பு முகாம் நடக்கிறது. ஜெயங்கொண்டம் வட்டாரத்திற்கு ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 19ம் தேதியும், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 20ம் தேதியும், தா.பழூர் வட்டாரத்திற்கு தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22ம் தேதியும், அரியலூர் வட்டாரத்திற்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 25ம் தேதியும் நடக்கிறது. இந்த முகாம் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்டதை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும், மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாயந்த அடையாள அட்டை இதுநாள் வரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரியலூர் கலெக்டர் ரத்னா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: