- அஇஅதிமுக
- எடப்பாடி
- முன்னாள் மாநில செயலாளர்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- Mutharasan
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கம்யூனிஸ்ட்
- சிபிஐ
- சிபிஎம்
- கம்யூனிஸ்டுகள்
1. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான வரவேற்பு, தமிழகத்தில் முன்பு இருந்ததை போல, தற்போதும் இருக்கிறதா?
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மக்களிடையே எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு. சி.பி.ஐ அல்லது சி.பி.எம் என்று தனித்தனியாகப் பார்க்காமல், பொதுவாக கம்யூனிஸ்டுகள் ஒரு ஜாதியையோ, மதத்தையோ அல்லது கடவுளையோ காட்டி அரசியல் செய்பவர்கள் கிடையாது. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் ஒற்றுமை, அவர்களின் நலன் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி கடந்த நூறு ஆண்டுகளாகக் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. போராட்டம் மட்டுமல்லாமல், பல மகத்தான சாதனைகளையும் செய்துள்ளது. நிலச் சீர்திருத்தம், குடியிருப்பு மனைப் பட்டாக்கள், தொழிலாளர்களின் உரிமைப் பிரச்னைகள் மற்றும் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ நாங்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்றாலும், இயக்கத்தின் வாயிலாகவும் மக்கள் போராட்டங்கள் மூலமாகவும் பல வெற்றிகளைச் சாதித்திருக்கிறோம். விடுதலைப் போராட்ட காலத்திலும் அதற்குப் பின்னரும் அதிக தியாகங்களைச் செய்த கட்சி கம்யூனிஸ்ட் கட்சிதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே, கம்யூனிஸ்டுகளுக்கான வரவேற்பு அன்றும், இன்றும், என்றும் குறையாது.
2. அதிமுக கூட்டணியிலும் திமுக கூட்டணியிலும் அங்கம் வகித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இரண்டிலும் கிடைத்த அனுபவங்கள் மற்றும் வேறுபாடுகள் என்னென்ன?
இரண்டு கட்சிகளும் தங்களைத் திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொண்டாலும், கொள்கை ரீதியாக உறுதியாக நிற்கிற கட்சி திமுக தான். நாங்கள் அவர்களோடு இணைந்து பயணிக்க இதுவே மிக முக்கிய காரணம். அதிமுக தன்னைப் பலமுறை திராவிட இயக்கம் என்று பறைசாற்றிக்கொண்டாலும், கொள்கை ரீதியாக அவர்கள் அடிக்கடி தடம் புரள்கிறார்கள். மாநில உரிமைகள் தொடர்பான பிரச்னைகளில் அதிமுகவிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை. உதாரணமாக, கல்வி நிதி மற்றும் ‘மும்மொழித் திட்டம்’ போன்ற விவகாரங்களில் ஒன்றிய அரசுக்கு எதிராகத் திமுக எடுக்கும் உறுதியான முடிவுகளை அதிமுக எடுப்பதில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்ததில்லை. ஆனால், தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, கொள்கை ரீதியாகத் தடுமாறுகிறது. எடப்பாடி பழனிச்சாமி பாஜவுடன் இனி உறவு கொள்ள மாட்டோம் என்று சத்தியம் செய்தார், ஆனால் அந்த ‘சத்தியம் சர்க்கரைப் பொங்கல்’ ஆகிவிட்டது. அவர்கள் பாஜவுடன் மீண்டும் இணைந்துவிட்டார்கள். திமுக கொள்கை ரீதியாக மிகவும் உறுதியான கட்சியாகச் செயல்படுகிறது.
3. ஒவ்வொரு கட்சியிலும் வசீகரிக்கும் தலைமைகளை கட்சியினர் எதிர்பார்க்கும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளில் எந்த எதிர்பார்ப்பின்படி தலைவர்கள் உருவாகிறார்கள்?
கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில், ஒரு உறுப்பினராகச் சேர்ந்ததற்குப் பிறகு ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு, நேர்மையான முறையில், எளிமையான முறையில், மிகச்சிறந்த ஒழுக்கத்தோடு அவர் ஆற்றுகிற பணியைப் பொறுத்து மக்கள் தலைவர்களை உருவாக்குகிறார்கள். உதாரணமாக நல்லகண்ணு இருந்தார். அவர் மறைவுச் செய்தியைக் கேட்டு கட்சிக்கு அப்பால் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்தார்கள். முதல்வரே வந்து முழக்கமிட்டார். முதல்வரே வந்து ‘செவ்வணக்கம் செவ்வணக்கம்’ என அவரே முழக்கமிட்டார். எல்லாரையும் ஆச்சரியப்படத்தக்க செய்தி அது. உணர்வுப்பூர்வமாக ஆற்றுகிற பணி, சாதாரண மக்களுக்கு, ஏழை மக்களுக்கு, எளிய மக்களுக்குப் பாடுபடுகிற பணி.கம்யூனிஸ்ட் கட்சியில் பதவிகள் என்பது கிடையாது, பொறுப்புகள்தான் வழங்கப்படுகிறது. இன்னாருக்கு இன்னென்ன பொறுப்புகள் என்று, அப்படித்தான் புகழ்மிக்க தலைவர்கள் உருவாகி வருகிறார்கள்.
4. திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 இடங்களும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எட்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதால் கூட்டணிக்குள் ஏதேனும் திருப்தியின்மை நிலவுகிறதா?
ஒவ்வொரு அரசியல் கட்சியும், பெரிய கட்சியாக இருக்கலாம், சிறிய கட்சியாக இருக்கலாம், ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு தேர்தலிலும் கடந்த தேர்தலை விட கூடுதலாக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றுதான் ஒவ்வொரு கட்சியும் விரும்பும். அதுதான் எதார்த்தம். ஆனால் இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அணியில் இருக்கக்கூடிய சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் சென்ற தேர்தலை விட ஒரு இடங்கள் குறைக்கப்பட்டது என்பது வருத்தமான விஷயம்தான். இல்லை என்று மறுக்க முடியாது. இன்னொருத்தருக்குக் கூடுதலாகக் கொடுக்கிறது என்பது அது வேறு, அது பிரச்னை இல்லை. விடுதலைச் சிறுத்தைகளுக்கு 8 சீட் கொடுத்திருக்கிறார்கள் என்றால் திருமாவளவன் பேசுகிற பொழுது இடதுசாரிகளுக்கு 18 இடங்கள் என்றுதான் பெருமிதத்தோடு சொன்னார், அது வேறு. தேமுதிகவிற்கு கொடுத்திருக்கிறார்கள் அது வேறு விஷயம். தங்களுடைய இடங்கள் குறைந்து போச்சு என்கிற ஒரு வருத்தம் இருக்கா? நிச்சயமாக அந்த வருத்தம் இருக்கிறது. ஆனாலும் அதையும் தாண்டி அரசியல் இருக்கிறது. சீட்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அரசியல்தான் ரொம்ப முக்கியமானது.
இன்றைக்கு நாட்டில் நிலவுகிற அரசியல் மிக அபாயகரமான அரசியல். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுவது, மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிராகச் செயல்படுவது, மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்துவது, கடவுளைக் காட்டி மக்களைப் பிளவுபடுத்துவது, விவாசயிகள், தொழிலாளர்கள் உரிமைகள் பறிக்கப்படுவது போன்ற பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. இந்தச் சூழலில் எங்களுடைய எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும், இடங்களைக் காட்டிலும் அரசியல்தான் முக்கியம் என்கிற முறையில் அதை ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
