×

பனையூர்காரர்களின் மெகா பாலிடிக்ஸ்: பாஜ நடத்திய அண்டர்கிரவுண்டு டீலிங்; கைமாறிய ஸ்வீட் பாக்ஸ்கள்; பெரம்பூரை பாமகவுக்கு அதிமுக தாரைவார்த்தது ஏன்? மண்ணின் மைந்தர்கள் ஏமாற்றம்; ஜாதி ஓட்டு கணக்கு கைகூடுமா?

தேர்தல் என்றாலே பாஜவின் ரகசிய ஆபரேஷனுக்கு பஞ்சமிருக்காது. ஒவ்வொரு தேர்தலிலும் பாஜ போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்வது மட்டுமல்லாது அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் வெற்றி பெற வேண்டும் அவர்களுக்கு வேண்டப்படாதவர்கள் தோல்வி அடைய வேண்டும் என்பதற்காக பல சித்து வேலைகளை பல்வேறு தேர்தல்களில் பாஜ செய்து வருகிறது. இதற்கு மாநில கட்சிகளை மிரட்டி அடி பணியவைத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பாஜவின் உள்ளடி வேலைகள் நேற்று முதலே தொடங்கிவிட்டன.

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் வெளியானது. இதில், அதிமுக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல தொகுதிகளில் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் அதிமுகவினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக மிகவும் வலிமையாக உள்ள இடங்களில் கூட பாஜ மிரட்டி அந்த தொகுதிகளை வாங்கியது நேற்று வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது. வட சென்னையில் முக்கிய தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளார் என்ற செய்தி பரவலாக கூறப்பட்டு வருகிறது.

இதற்காக அலுவலகம் தயாரிப்பு மற்றும் அவர் ஓய்வு எடுப்பதற்கு வீடு பார்ப்பது போன்ற பல வேலைகளை தவெகவினர் செய்து வருகின்றனர். ஒருவேளை விஜய் போட்டியிடுவதாக இருந்தால் அதிமுக சார்பில் மிக வலிமையான வேட்பாளரை நிறுத்துவார்கள் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் நேற்று வெளியிடப்பட்ட தொகுதிகள் பட்டியலில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை கண்டதும் அதிமுகவினர் மட்டுமல்லாது பாமகவினரே அதிர்ச்சி அடைந்தனர்.

பெரம்பூரில் போட்டி போடும் அளவிற்கு பாமகவில் எந்த வேட்பாளர் உள்ளார் என அவர்களே புருவம் தூக்கிப் பார்க்கின்றனர். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அது திமுகவின் கோட்டையாக உள்ளது. 1962 முதல் 2021ம் ஆண்டு வரை நடைபெற்ற 15 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 10 முறையும், அதிமுக நான்கு முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பாமக ஒருமுறை கூட வெற்றி பெற்றது கிடையாது. பெரிய கட்சிகளோடு சேர்ந்து கூட்டணியிலும் இருந்தது கிடையாது. அப்படி இருக்க சம்பந்தமே இல்லாமல் பாமகவுக்கு ஏன் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி ஒதுக்கினார்கள் என்று விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கடைத்தது.

ஏற்கனவே கரூர் வழக்கில் தவெக தலைவர் விஜய்யின் எதிர்காலம் பாஜ கையில் தான் உள்ளது என பலரும் விமர்சித்தனர். இந்நிலையில், பாஜவின் கட்டுப்பாட்டுக்குள் விஜய் வந்து விட்டார். அதனால் தான் சிபிஐ அலுவலகத்தில் இருந்து கடைசியாக வெளிவந்த போது விஜய் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என பரவலாக பேசப்பட்டது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டதால் பாஜ சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை முதலில் பாஜவுக்கு தர அழுத்தம் தரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி பாஜ வேட்பாளரை டம்மியாக போட்டு தேர்தலை சந்தித்தால் அனைவரும் வெளிப்படையாகவே கிண்டல் செய்வார்கள் என்பதால் பாஜகவின் அடிமை கட்சியாக மாறிப்போன பாமகவுக்கு பெரம்பூரை ஒதுக்குமாறு பாஜ சார்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளது.

அதிமுகவில் இந்த முறை பெரம்பூரைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பாஜவின் அழுத்தம் காரணமாக இதுவரை பெரம்பூரில் ஒருமுறை கூட வெற்றி பெறாத பாமக பெரம்பூரில் போட்டியிடும் என நேற்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்காக ஏற்கனவே பாமக பெரம்பூர் தொகுதியை எப்படியாவது கேட்டு பெற வேண்டும் என அன்புமணிக்கு லாட்டரி அதிபரின் மருமகன் அழுத்தம் கொடுத்துள்ளார். இதற்காக பல்வேறு ஸ்வீட் பாக்ஸ்களும் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில விஷயங்களையும் செய்து தருகிறேன் என லாட்டரி அதிபரின் மருமகன் அன்புமணிக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே எடப்பாடிக்கு அதிக அழுத்தம் கொடுத்து அன்புமணி பெரம்பூரை கேட்டு பெற்றதாகவும் கூறப்படுகிறது.

தொகுதிக்கு சம்பந்தமில்லாத பெண் வேட்பாளரை அங்கு நிற்க வைத்து சிறுபான்மையினர் மற்றும் தலித் ஓட்டுக்கள் பெரும்பாலும் பாமகவுக்கு வராது என்பதால் அந்த ஓட்டுக்கள் விஜய்க்கு போகும் என்ற ஜாதி கணக்கு அடிப்படையிலும் இந்த கணக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பனையூர் பண்ணையாருக்காக அதே பனையூரை சேர்ந்த மாம்பழக்காரர் உள்குத்து வேலைகளை பார்ப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. இன்னும் எத்தனை தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி பேச்சைக் கேட்டு தவெகவுக்கு விலை போகப் போகிறார்கள் என்பது போகப் போக தெரியும் என அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

* பிரிட்ஜ் தருவது ஒரு திட்டமா? எடப்பாடிக்கு சீமான் கேள்வி
கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் நேற்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சுகந்தி பார்த்தீபன், பர்கூர் தொகுதி வேட்பாளர் கவின்குமார் ஆகியோரை ஆதரித்து, பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், ரூ.10,000 தருகிறோம், மகளிருக்கு ரூ.2,000, பிரிட்ஜ் தருவோம் என்று சொல்கிறார்கள். பிரிட்ஜில் என்ன வைக்க முடியும்? காய்கறிகள் தான். அந்த காய்கறிகளை தருவது விவசாயிகள் தான். இதெல்லாம் ஒரு திட்டமா? நாட்டையும், மண்ணையும் விற்பனை செய்து கடன் வாங்கி கொடுப்பீர்களா. ஒருபுறம் இலவசங்கள் வழங்கி விட்டு, மறுபுறம் தண்ணீரை கூட விற்பனை செய்கின்றனர். வட இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை கொண்டு வந்தீர்கள். எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு ஓட்டு திருத்தும் பணியில், ஒன்றரை கோடி வட இந்தியர்களுக்கு ஓட்டும் வாங்கி கொடுத்துள்ளீர்கள். என் நாட்டில் அரசியல் அதிகாரத்தை அவன் முடிவு செய்வான். ஏற்கனவே நாம் மொழி, வரலாறு, வழிபாடு, நிலத்தை விட்டு வெளியேறி விட்டோம், அடுத்து இந்த நாட்டை விட்டு வெளியேறுவது தவிர வழி இல்லை. நான் போதிக்கும் போது புரியாது. பாதிக்கும் போது தான் புரியும்,’’ என்றார்.

* தோல்வியை மறைக்க இலவச அறிவிப்பு எல்லாம் நாடகம் புளுகு மூட்டை: இபிஎஸ்சை விளாசிய ஓபிஎஸ்
தேனி மாவட்டம், போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள எதற்கும் நம்பகத்தன்மை இல்லை. அவர் ஒரு ஆளுமை மிக்க அரசியல் தலைவர் இல்லை. 2017ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இருந்து அண்மையில் நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை பத்து தேர்தல்களில் அவர் படுதோல்வி அடைந்திருக்கிறார். ஒரு தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அடுத்தத் தேர்தலில் கட்சியை தூக்கி நிறுத்தி வெற்றிபெறச் செய்பவர்தான் ஆளுமை மிக்க தலைவர். அந்த ஆளுமை எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஒரு பொய்யான அறிக்கை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கடந்த காலங்களில் கொடுத்த ஒரு வாக்குறுதியையாவது அவர் நிறைவேற்றி இருக்கிறாரா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

என்டிஏ கூட்டணிக்கு அதிமுகவே தலைமை என எடப்பாடி பழனிசாமிதான் சொல்லிக் கொள்கிறார். ஆனால் கூட்டணியில் உள்ள கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. எனவே இது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி இல்லை. டெல்லி பட்டணத்தில் இருந்து உத்தரவு வருகிறது, அதை பழனிசாமி நிறைவேற்றுகிறார். தான் ஒரு ஆளுமை மிக்க தலைவர் என்று நிரூபிக்க நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. மக்களிடம் அவரது நாடகம் எடுபடாது. கொரோனா காலகட்டத்தில் 146 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று வாக்குறுதி அளித்த பழனிசாமி அப்போதே மூடியிருக்கலாம். ஏன் செய்யவில்லை? அவர் செய்யமாட்டார். பத்து தோல்வியை மறைக்க வாக்குறுதிகள் என்று எடப்பாடி பழனிசாமி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக நான் தூக்குப் போட்டுக்கொண்டு சாவேன் என்றார் டிடிவி.தினகரன். அது நடந்திருக்கிறதா? இவர் அவரை 420 என்றார். அவர் இவரை 420 என்றார். இப்போது, என் அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி என்கிறார். எல்லாம் நாடகம். நாடகத்தை நான் எப்போதுமே நம்புவதில்லை என்று கலைஞர் சொல்லியிருக்கிறார். அவர்களது நாடகத்தை நம்ப வேண்டாம். சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு தெரிவித்தார்.

* பாறாங்கல் பாஜவை கட்டிக்கிட்டு குதிச்சா மூழ்கி தான் போவாங்க… எஸ்.வி.சேகர் கலாய்
திண்டுக்கல்லில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும். 160 சீட்டுகளுக்கு மேல் பெரும்பான்மையுடன்2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார். திமுகவின் எந்த ஒரு நலத்திட்ட உதவியையும் அதிமுகவால் செய்ய முடியாது. வேற எந்த கட்சியும் செய்யவும் முடியாது. எந்த இலவசத்தையும் வாங்காதீர்கள் என்று சொன்ன விஜய், தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பவுன் மோதிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 2,000 குழந்தைகள் பிறக்கிறது. வருடத்திற்கு எவ்வளவு குழந்தைகள் பிறக்கும்.

இவர்களுக்கு மோதிரம் வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் கூட நகை கிடையாது. வாய்க்கு வந்ததை உளற கூடாது. சினிமா வேறு அரசியல் வேறு என்பதை இந்த நிமிடம் வரை புரிந்து கொள்ளாமல் உள்ளார். ‘சினிமா நடிகர்களை சினிமா ஸ்கிரீன்களில் மட்டும் நடிகராக பாருங்கள். அவ ர்கள் எல்லாம் தெரிந்த புத்திசாலிகளாக நினைக்காதீர்கள். தியேட்டர்களில் உள்ள ப்ரொஜெக்டர்களை நிறுத்தி விட்டால் வெள்ளை நிற ஸ்கிரீன் மட்டும் நமக்கு தெரியும். நடிகர்கள் பின்னால் ஓடுவதை நிறுத்தி கொள்ளுங்கள். பாஜ ஒரு மிகப்பெரிய பாறாங்கல். அவர்களை கட்டி கொண்டு யார் வேண்டுமானலும் தண்ணீரில் குதிக்கலாம். பாறாங்கல்லுக்கு எதுவும் ஆகாது. கட்டி கொண்டு குதிப்பவர்கள் தான் மூழ்கி போவார்கள் என்றார்.

Tags : BANAYURGARIS ,BAJA ,PERAMBUR ,GAWA ,Bajaj ,
× RELATED 28 தொகுதிகளை அடையாளம் காண...